- அறுபத்து மூன்று விழா
- கபாலீஸ்வரர் கோயில்
- மயிலாப்பூர்
- சென்னை
- மயிலாப்பூர் அறுமூன்று திருவிழா
- கபாலிஸ்வரா
- பங்கூனி விழா
சென்னை, மார்ச் 31: மயிலாப்பூர் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், 63 நாயன்மார்களுடன் காட்சியளித்த கபாலீஸ்வரரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளன்று பவளக்கால் விமானத்தில் கபாலீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து, அன்னை கற்பகாம்பாள் மயில் வடிவில் காட்சி தரும் அற்புத நிகழ்வும், சுவாமி, அம்பாள், முருகப் பெருமான் வீதி உலாவும் நடைபெற்றன. அதிகார நந்தி, சவுடல் விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்நிலையில், பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது. 96 அடி உயரம், 300 டன் எடைகொண்ட பிரமாண்ட தேரில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் காலை 6 மணிக்கே எழுந்தருளினர். 6.30 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் தொடங்கியது. அலைகடலெனத திரண்டிருந்த பக்தர்கள் ‘சம்போ மகாதேவா’ என்ற முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சிவ வாத்தியங்கள் முழங்க, நான்கு மாடவீதிகளிலும் கம்பீரமாக அசைந்தாடி வந்த தேர் காலை 11 மணியளவில் நிலையை வந்தடைந்தது. 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து விழாவின் 8ம் நாளான நேற்று பிரசித்தி பெற்ற அறுபத்து மூவர் விழா நடைபெற்றது.
அறுபத்து மூவர் விழா என்பது சிவபெருமானின் 63 தீவிர பக்தர்களான நாயன்மார்களைக் கவுரவிக்கும் ஒரு ஆன்மிக நிகழ்வாகும். கபாலீஸ்வரரை நோக்கியவாறு, நாயன்மார்களின் பல்லக்குகள் பின்னோக்கி நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இது அடியார்கள் இறைவனைப் பணிந்து செல்வதைக் குறிக்கிறது. கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் ஆகியோருடன் 63 நாயன்மார்களின் வெண்கலச் சிலைகளும் பல்லக்குகளில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது. இந்த ஊர்வலத்தில் மயிலாப்பூரின் மற்ற தெய்வங்களான கோலவிழி அம்மன், முண்டகக்கண்ணி அம்மன் மற்றும் திருவள்ளுவர் வாசுகி சிலைகளும் கொண்டு வரப்பட்டது.
மேலும், நேற்று திருஞானசம்பந்தர் பூம்பாவை என்ற பெண்ணை உயிர்ப்பித்ததைக் கூறும் நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு பார் வேட்டைக்குச் சந்திரசேகரர் எழுந்தருளும் நிகழ்ச்சியும், பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற்றது. வெள்ளி விமானத்தில் சிவபெருமான் 63 நாயன்மார்களோடு வலம் வரும் காட்சியைக்காண, சென்னை, புறநகர் பகுதிகள் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அறுபத்து மூவர் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு தினகரன் நாளிதழ் சார்பில் உணவுகள், தண்ணீர் பாட்டில் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.
அதைப்போன்று தனியார் அமைப்புகள், தன்னார்வலர்கள் சார்பில் மாட வீதிகளில் பந்தல்கள் அமைத்து, பக்தர்களுக்கு உணவு, பிஸ்கட் பாக்கெட், நீர்மோர், பானகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நாளை இரவு 8.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், வரும் 3ம் தேதி விழா நிறைவுத் திருமுழுக்கு (தீர்த்தவாரி) நடைபெறுகிறது. ஏப்ரல் 3ம் தேதி விடையாற்றி விழா உற்சவமும் நடைபெறுகிறது. மேலும் பங்குனி மாதத்தில் நடைபெறும். இதேபோல், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் மற்றும் மல்லீஸ்வரர் கோயில்களிலும் நேற்று முன்தினம் தேர்த்திருவிழா நடைபெற்றது, அங்கேயும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
