×

மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 35 லட்சம் மதிப்பு இந்திய ரூபாய் அமெரிக்க டாலர் கரன்சி பறிமுதல்

சென்னை, மார்ச் 31: மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.35 லட்சம் மதிப்புடைய இந்திய ரூபாய், அமெரிக்க டாலர் கரன்சிகளை சென்னை விமான நிலைய ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ளன. இதையொட்டி, வேட்பாளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும், வாகன தணிக்கை உள்ளிட்ட தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விமானம், ரயில் நிலையங்களிலும் கண்காணிப்புகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை இணை ஆணையர் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, சென்னை சர்வதேச முனையம், உள்நாட்டு முனையம் போன்றவைகளிலும், விமானங்கள் வருகை, புறப்பாடு பகுதிகளிலும், தீவிர கண்காணிப்பு சோதனைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மதுரையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 1க்கு வந்தது. சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் சிறப்புக் குழுவினர், விமானத்தில் வந்த பயணிகளை ரகசியமாக கண்காணித்தனர்.

மதுரையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள் சூட்கேஸ், பை போன்றவைகளை எடுத்துக்கொண்டு வெளியில் செல்ல முயன்றனர். அப்போது, சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் தனிப்படையினர் இருவரிடமும் விசாரித்தனர். அப்போது அவர்கள், இது உள்நாட்டு விமான நிலையம். சுங்கத்துறையினர் இங்கு வந்து ஏன் சோதனை போடுகிறீர்கள்? என்று கேள்விகள் கேட்டனர். அதற்கு சுங்கத்துறையினர், நாங்கள் சந்தேகப்பட்டால் எந்த இடத்திலும், யாரையும் நிறுத்தி, சோதனை போடுவதற்கு அதிகாரம் உள்ளது என்று கூறி, அவர்களின் உடைமைகளை திறந்து சோதித்தனர்.

அதில், அமெரிக்க டாலர் கரன்சி சுமார் ரூ.33.5 லட்சம் மதிப்பிலும், இந்திய கரன்சி ரூ.1.5 லட்சமும், மொத்தம் ரூ.35 லட்சம் சிக்கியது. உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், பணத்தை பறிமுதல் செய்து இருவரையும், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பணத்தை யாரிடம் கொடுப்பதற்காக எடுத்து வந்தனர்? இதில் அரசியல் பின்னணி உள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சென்னை விமான நிலையத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ஆவணங்கள் இல்லாத ரூ.35 லட்சம் மதிப்புடைய பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Madurai ,Chennai ,Air Intelligence ,Chennai airport ,Tamil Nadu ,
× RELATED சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி...