×

வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதி

தர்மபுரி, மார்ச் 28: தர்மபுரி மாவட்டத்தில், வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போது வேட்பாளருடன் அதிகபட்சமாக 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் சதீஸ் தெரிவித்தார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி வேட்பு மனு தாக்கல் செய்தல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சதீஸ் தலைமை வகித்து பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில், வேட்பு மனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்கி வரும் 6ம் தேதி முடிகிறது. 31.3.2026, 1.4.2026, 03.4.2026, 5.4.2026 ஆகிய விடுமுறை நாட்களை தவிர, காலை 11 முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போது, வேட்பாளருடன் அதிகபட்சமாக 4 நபர்கள் மட்டும் (வேட்பாளருடன் சேர்ந்து 5 நபர்கள் மட்டும்) தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்கு 100 மீட்டர் எல்லைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

வேட்பு மனு தாக்கல் செயல்முறையின் அனைத்துப் பகுதிகளும் வீடியோ பதிவு செய்யப்படும். வேட்பு மனு தாக்கல் செயல்முறையின் போது, அனைத்து நிகழ்வுகளும் ஒளிப்பதிவு செய்யப்படுவதால், வேட்பாளர்கள், அவருடன் உள்ளவர்கள் மற்றும் மனு தாக்கலின் போது உள்ள அலுவலர்கள் ஆகியோர் தேவையற்ற உரையாடல்கள் அல்லது விவாதங்களில் ஈடுபடக்கூடாது, இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, ஏடிஎஸ்பி சோமசுந்தரம், 5 சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,District Election Officer ,Sathees ,
× RELATED அரியலூரில் ரூ.101.50 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடம் கட்டும் பணி