×

ஈரான் மீதான போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி சர்வதேச கச்சா எண்ணெய் விலை 15% சரிவால் திருப்பம்: ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து சீராக வாய்ப்பு: பேச்சுவார்த்தை குறித்த முரண்பட்ட தகவலால் ரஷ்யா அதிர்ச்சி

 

வாஷிங்டன்: ஈரான் மீதான போர் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்ததால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை 15 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சீராக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

குறிப்பாக ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் ஏவுகணை சோதனைகள் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வந்தன. இதன் தொடர்ச்சியாக, கடந்த சில வாரங்களாக இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் போர் மூண்டது. அமெரிக்கப் படைகள் ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகள் மீது தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

இந்த கோரமான போரில் ஈரானில் 1,400க்கும் மேற்பட்டோரும், லெபனானில் 1,000க்கும் அதிகமானோரும் உயிரிழந்தனர். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. அமெரிக்க மக்கள் ஒரு காலன் பெட்ரோலுக்கு வழக்கத்தை விட ஒரு டாலர் கூடுதலாக செலவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த இக்கட்டான சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘ஈரானில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை அடுத்த 5 நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். ஈரானின் மிக உயரிய மற்றும் மதிக்கத்தக்க ஒரு நபருடன் தற்போது ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது, அவர்கள் யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்த வேண்டும் மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்குக் கடும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்தப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவைத் தரும் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அமெரிக்காவின் இந்தத் தகவலை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து சபாநாயகர் காலிபாப் கூறுகையில்: ‘அமெரிக்காவுடன் எந்தவிதமான நேரடிப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. உலகச் சந்தையைத் தன்வசப்படுத்தவும், பொருளாதார லாபத்திற்காகவும் டிரம்ப் இத்தகைய பொய்ச் செய்திகளைப் பரப்புகிறார்’ என்று கூறியுள்ளார்.

ஒருபுறம் மின் நிலையங்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டாலும், மற்ற ராணுவ இலக்குகள் மீது அமெரிக்காவின் துல்லியத் தாக்குதல்கள் தொடர்வதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. அதே சமயம், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தனது தரைப்படைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. எகிப்து, துருக்கி மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இப்பகுதியில் பெரும் போர் ஏற்படுவதைத் தடுக்கத் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

உலக நாடுகளுக்குத் தேவையான 20 சதவீத கச்சா எண்ணெய் விநியோகிக்கப்படும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதி மூடப்பட்டதாலும், ஈரான் மற்றும் கத்தாரில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாலும் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த வாரம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 120 டாலர் வரை உயர்ந்திருந்தது.

ஆனால் தற்போது டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக 13 முதல் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக சந்தையில் எரிசக்தி மீதான முதலீடுகள் பெருமளவில் திரும்பப் பெறப்பட்டன. இதன் விளைவாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 17 டாலர் வரை குறைந்து, 96 டாலராக வர்த்தகமானது.

அதேபோல் டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் விலை 13.5 சதவீதம் குறைந்து 85.28 டாலராக நிலைபெற்றது. அமெரிக்காவின் போர் நிறுத்த அறிவிப்பு காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதைகள் மீண்டும் திறக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஈரான் அரசு ஊடகங்கள் இந்தப் பேச்சுவார்த்தையை மறுத்துள்ளது கச்சா எண்ணெய் சந்தையில் சிறிய அளவிலான நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் போரில் ரஷ்யாவின் தலையீடு குறித்து கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து முரணான தகவல்கள் வருகின்றன. நிலைமையை ரஷ்யா உன்னிப்பாக கவனித்து வருகிறது. விரைவில் அங்கு அமைதி திரும்பும் என நம்புகிறோம்’ என்று கூறினார். இதற்கிடையே, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை அவசரமாக செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை மேற்கொண்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

* மத்திய கிழக்கு போரால் இதுவரை 4,300 பேர் பலி

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்துள்ள போரில் அதிகபட்சமாக ஈரானில் 3,230 பேரும், லெபனானில் 1,029 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக்கில் 61 பேர், இஸ்ரேலில் 22 பேர் மற்றும் அமெரிக்காவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகத்தில் 8 பேர், கத்தாரில் 7 பேர், குவைத்தில் 6 பேர், சிரியாவில் 4 பேர், ஓமனில் 3 பேர், சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைனில் தலா 2 பேர் என உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இதில் பலியாகியுள்ளார்.

இந்த மோதலில் 6 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஓமனில் உள்ள ஒரு தொழிற்பேட்டை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு இந்தியர்களும், சவுதி அரேபியாவில் ஒரு இந்தியரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில் கடந்த 25 நாட்கள் போரில் 4,300 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Ceasefire ,Iran ,Strait of Hormuz ,Russia ,Washington ,U.S. ,President Trump ,
× RELATED அமெரிக்காவின் ராணுவ அமைச்சர் தான்...