வாஷிங்டன்: ஈரான் மீதான போரில் அமெரிக்கா பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்த போரில் எந்த நட்பு நாடுகளும் அதிபர் டிரம்புக்கு உதவ முன்வரவில்லை. ஈரான் போர் மூலம் உலகளாவிய பொருளாதார சிக்கலை டிரம்ப் உண்டாக்கிவிட்டதாக அவப்பெயரும் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டிலும் அவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டென்னசி மாகாணத்தில் நடந்த மெம்பிஸ் பாதுகாப்பு பணிக்குழுவின் வட்டமேசை மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப், ‘‘ஈரான் போர் தொடர்பான முடிவை எடுப்பதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், விமானப்படை ஜெனரல் டான் கெய்ன் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளையும் அழைத்து நிலைமை குறித்து ஆலோசித்தேன். ஈரான் 47 ஆண்டுகளாக தொடர்ந்து தீவிரவாதத்தை மட்டுமே பரப்பி வருகிறது.
இப்போது அணு ஆயுதத்தை பெறும் நிலைக்கு மிகவும் நெருக்கத்தில் உள்ளனர். எனவே மத்திய கிழக்கில் சிறிய நடவடிக்கை மேற்கொண்டு பெரிய பிரச்னைக்கு முற்றிலும் முடிவு கட்டலாம் என்று கூறினேன். அப்போது பீட் ஹெக்சேத் தான் முதலில் குரல் கொடுத்தார். ‘அவர்கள் கையில் அணு ஆயுதம் கிடைப்பதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. நாம் தாக்குதல் நடத்துவோம்’ என ஹெக்சேத் கூறினார்’’ என ஹெக்சேத்தை பாராட்டினார். இதன் மூலம் ஈரான் போருக்கு தான் மூல காரணம் இல்லை என்பதை டிரம்ப் மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார்.
