பொகோட்டா: கொலம்பியா நாட்டின் புவேர்ட்டோ லெகுயுஸாமோ பகுதியிலிருந்து நேற்று மாலை ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு ஹெர்குலஸ் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 66 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் பெட்ரோ ஏ சான்செஸ் கூறுகையில், ‘ராணுவ வீரர்கள் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. விபத்து நடந்த இடத்திற்கு ராணுவ மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தார். இந்த விமானத்தில் சுமார் 120 பேர் வரை இருந்ததாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே கொலம்பியா விண்வெளி படை தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், பணியில் இருந்த 6 ஊழியர்கள் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் பொலிவியா நாட்டு விமானப்படைக்கு சொந்தமான ஹெர்குலஸ் ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் டஜன் கணக்கானோர் உயிரிழந்தனர். அந்த துயரம் மறைவதற்குள் தற்போது கொலம்பியாவில் மற்றுமொரு விமான விபத்து நடந்துள்ளது.
