துபாய்: கடந்த 19ம் தேதி உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) முனையமான கத்தாரின் ராஸ் லபான், ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ராஸ் லபான் முனையம் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. 295 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இந்த வளாகத்திற்குள் உள்ள எரிவாயுவை திரவமாக்கும் ஆலையில் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
இதில் பல லட்சம் கோடி முதலீடுகள் தீயில் கருகி போயிருக்கின்றன. இதன் காரணமாக கத்தார் எனர்ஜி நிறுவனம் நீண்ட கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் தங்கள் விநியோகத்தை வழங்க முடியாததற்காக போர்ஸ் மஜூர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதன் காரணமாக கத்தாரின் எல்என்ஜி உற்பத்தியில் 17 சதவீதம் முடங்கியிருக்கிறது. இது உலகளாவிய விநியோகத்தில் பெரிய பற்றாக்குறையை உருவாக்கி உள்ளது. உலகளவில் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் காஸ் சிலிண்டர்கள் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்த சூழலில், கத்தாரில் எரிசக்தி உள்கட்டமைப்பு சேதத்தை சரி செய்ய பல ஆண்டுகள் ஆகலாம் என நிபுணர்கள் கூறி உள்ளனர். இதற்கு எல்என்ஜியின் சிக்கலான தன்மையே காரணம். கத்தாரின் எல்என்ஜியில் சுமார் முக்கால் பங்கு ஆசியாவிற்குச் செல்வதால், இது ஆசியாவையே அதிகம் பாதிக்கப் போகிறது. குறிப்பாக சீனா, இந்தியா, தைவான், தென் கொரியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நீண்ட காலத்திற்கு பாதிப்புகள் நீடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
விநியோகம் தடைபடுவதால் காஸ் சிலிண்டர்கள் விலை உயர்வு இன்னும் நீண்ட ஆண்டுகளுக்கு நீடிக்கலாம். விலை அதிகமாக கொடுக்கும் நாடுகளுக்கே எரிவாயு கிடைக்கும் நிலை ஏற்படும். இதனால் காஸ் சிலிண்டர் பற்றாக்குறை குறைந்தபட்சம் இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
