×

பேச்சுவார்த்தைக்கான அறிகுறிகளுக்கு மத்தியில் உக்கிரத்துடன் நீடிக்கிறது மேற்கு ஆசியா போர்: முழு வெற்றி பெறும் வரை தாக்குதல் நீடிக்கும் என ஈரான் ராணுவம் சூளுரை

துபாய்: பேச்சுவார்த்தைக்கான லேசான அறிகுறிகளுக்கு மத்தியில், மேற்கு ஆசியா போர் 25வது நாளாக நேற்று உக்கிரம் குறையாமல் நீடித்தது. முழு வெற்றி பெறும் வரை போரிடப் போவதாக ஈரான் ராணுவம் சூளுரைத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்குவதாக மிரட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இரு தரப்பிலும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாகவும் நேற்று முன்தினம் திடீரென அறிவித்தார்.

இதனால் மேற்கு ஆசியாவில் போர் மேகங்கள் விலகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை நடந்த தகவலை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது. இது போலிச் செய்தி என கூறி இருக்கிறது. இந்நிலையில், மேற்கு ஆசியா 25வது நாளாக நேற்றும் உக்கிரம் குறையாமல் நீடித்தது. ஈரானின் முக்கிய நகரமான இஸ்பஹான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரந்த அளவிலான வான்வழி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.

அமெரிக்கா போர்நிறுத்தம் குறித்து பரிசீலித்து வரும் நிலையிலும், ஈரான் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி உள்ளார். இதே போல ஈரானும் இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து ஏவுகணைகளை ஏவியது. 100 கிலோ எடை கொண்ட ஏவுகணை, இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி ஏவுகணை குடியிருப்பு கட்டிடத்தை தகர்த்தது.

இதில் 4 பேர் காயமடைந்தனர். குவைத்தில் வான்வழி தாக்குதல் சிதறல்களால் மின்கம்பிகள் அறுந்து பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. பக்ரைனில் ஏவுகணை எச்சரிக்கை சைரன்கள் தொடர்ந்து ஒலித்தன. சவுதி அரேபியாவில் எண்ணெய் வளம் நிறைந்த கிழக்கு மாகாணத்தை குறிவைத்த 19 டிரோன்கள் அழிக்கப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

அதே சமயம், பேச்சுவார்த்தைகளை ஈரான் தொடர்ந்து மறுத்தாலும் இந்த வாரம் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அஜர்பைஜான், எகிப்து, ஓமன், பாகிஸ்தான், ரஷ்யா, தென் கொரியா, துருக்கி மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் போர் தொடர்பாக பேசி வருவதை அவரது அலுவலகம் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், அமெரிக்காவும் ஈரானும் சம்மதிக்கும் பட்சத்தில் இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே, ஈரானின் உயர்மட்ட ராணுவ தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் காதம் அல் அன்பியா நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஈரானின் வலிமையான ஆயுதப் படைகள், நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் பெருமிதம், வெற்றி மற்றும் உறுதியுடன் இருக்கின்றன. முழுமையாக வெற்றி கிடைக்கும் வரை இந்தப் பாதை தொடரும்’’ என கூறி உள்ளார். இது, ஒருவேளை பேச்சுவார்த்தை நடந்தால் அமெரிக்காவுக்கு எந்த விதமான சலுகைகளும் வழங்கப்படக் கூடாது என்பதை ஈரான் ராணுவம் எச்சரிக்கும் விதமாக உள்ளது.

ஏற்கனவே 2 முறை பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் அமெரிக்கா மீது ஈரான் நம்பிக்கை கொள்ள மறுக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் போர் தீவிரம் குறையாமல் நீடிப்பதாலும், ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து கப்பல்கள் தேங்கியிருப்பதாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலர்களை தாண்டியது.

* ஈரானில் பாதுகாப்பு செயலாளர் நியமனம்
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராகவும் முக்கிய பாதுகாப்பு தலைவராகவும் இருந்த அலி லாரிஜானி, சமீபத்தில் அமெரிக்க-இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்நிலையில், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய செயலாளராக புரட்சிகர படையின் முன்னாள் தளபதி முகமது பாகர் ஜோல்கதர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் துணை ராணுவமான புரட்சிகர காவல் படையில் பிரிகேடியர் ஜெனரல் என்ற உயர் பதவி வகித்தவர்.

* ஈரான் தூதர் வெளியேற லெபனான் உத்தரவு
லெபனானில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 10 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த சூழலில், ஈரான் தூதர் முகமது ரேசா ஷைபானி நாட்டை விட்டு வெளியேற லெபனான் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஷைபானியை ‘ஏற்றுக் கொள்ள முடியாத நபர்’ என அறிவித்துள்ள லெபனான் வெளியுறவு அமைச்சகம் வரும் 29ம் தேதிக்குள் அவர் நாட்டை விட்டு வெளியேற கெடு விதித்துள்ளது. ஈரானின் தூதரக விதிமீறல்கள், லெபனானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags : West Asia ,Iran ,Dubai ,Strait of Hormuz ,Iran’s… ,
× RELATED கொலம்பியா விமான விபத்தில் 66 வீரர்கள் பலி