தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களுக்கு எந்தெந்த தொகுதிகள் வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை தர வேண்டும், எந்த தொகுதிகள் எப்போதும் நமக்கு சாதகமாக உள்ள தொகுதிகள் என கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகின்றன. அந்த வகையில் ஒரு சில தொகுதிகளை எப்போதும் தங்களது கட்டுப்பாட்டில் கட்சிகள் வைத்துள்ளன. அதேபோல சில தொகுதிகளை எப்போதுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி விடுகின்றன.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடப் போவதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர். எதற்காக அவர்கள் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை தேர்ந்தெடுத்தார்கள் என்று பார்க்கும்போது சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு தொகுதியாக பார்க்கும்போது திமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்த நபர்களின் செல்வாக்கு, சிறுபான்மை ஓட்டுகள் போன்றவற்றை பார்த்து உளளனர்.
இதில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் கணிசமான சிறுபான்மையினர் ஓட்டு உள்ளதாலும் குறிப்பாக அதிமுக கட்சியை பொறுத்தவரை பெரம்பூரில் அப்படி ஒரு கட்சி இருந்ததற்கான அடையாளமே தெரியாத அளவிற்கு படுமோசமாக உள்ளதால் இரண்டாம் இடம் காலியாக உள்ளது என்று நினைத்து பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை தவெக தேர்வு செய்துள்ளது.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஷ் பாபு, மாவட்ட செயலாளராக இருந்தார். 4 தொகுதிகள் அவரிடம் இருந்தன. அதில் ஒன்று பெரம்பூர். அதன்பிறகு சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்களுக்கு இரண்டு தொகுதிகள் தான் என தொகுதிகள் பிரிக்கப்பட்டன. அப்போது 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.கே.நகரைச் சேர்ந்த ஆர்.எஸ்.ராஜேஷ் அதிமுகவில் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சி நடைபெறும்போது ஏற்பட்ட இடைத்தேர்தலில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் நின்று தோல்வி அடைந்தார். அதன் பின்பு 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் என்.ஆர்.தனபாலன் கூட்டணி கட்சி சார்பில் நின்று தோல்வி அடைந்தார்.
அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பெரும்பாலும் ஆர்.கே.நகர் தொகுதியில் முழு கவனம் செலுத்துகிறார். பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு தரவே அவர் அழுத்தம் தருகிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அதிமுகவினர் மண்ணின் மைந்தர்களுக்கு ஒரு முறையாவது வாய்ப்பு தாருங்கள் என கட்சி தலைமையிடம் மன்றாடி வருகின்றனர். ஆனால் அப்படி யாராவது ஒரு ஆளுக்கு சீட்டு கொடுத்து அவர்கள் வெற்றி பெற்று விட்டால் மாவட்ட செயலாளர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என நினைத்து அதிமுக மாவட்ட செயலாளர் பெரம்பூர் தொகுதியில் வேறு யாரும் வளர்ந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளார் என கூறப்படுகிறது.
இதன் வெளிப்பாடாகத்தான் கடைசியாக 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத என்.ஆர்.தனபாலனை கூட்டணி கட்சி சார்பில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் நிற்க வைத்து தோல்வியடைய வைத்தார்கள். இவ்வாறு தொடர்ந்து அதிமுக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை கைகழுவியதன் காரணமாக தற்போது அந்த தொகுதியில் ஒரு வெற்றிடம் உள்ளதால் அந்த வெற்றிடத்தை தவெக பூர்த்தி செய்ய விரும்புகிறது. சென்னையில் வேறு எந்த தொகுதியிலும் இப்படி ஒரு வெற்றிடத்தை ஒரு கட்சி விட்டு வைக்க முடியாது என்ற காரணத்தினால் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை தவெக தலைவர் விஜய் நிற்பதற்கு தேர்ந்தெடுத்து உள்ளதாக அதன் நிர்வாகிகளே கூறுகின்றனர்.
எனவே இம்முறையும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை கூட்டணி கட்சிக்கு தள்ளிவிடும் எண்ணத்தில் தான் அதிமுக உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த முறையாவது பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அதிமுகவினரின் எண்ணம் ஈடேற மண்ணின் மைந்தர்களுக்கு எடப்பாடி சீட் வழங்குவாரா அல்லது மாவட்டச் செயலாளரின் கோரிக்கையை ஏற்று கூட்டணி என்ற பெயரில் வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஸ்வீட் பாக்ஸ்களை வாங்கிக் கொண்டு பெரம்பூரை தாரை வார்ப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என அதிமுகவினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
