×

அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையங்களை ஆய்வு செய்த கலெக்டர்

காரைக்குடி, மார்ச் 20: காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் கா.பொற்கொடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு வரும் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

ஏப்.7 தேதி மனுக்கள் ஆய்வும், ஏப்.9ம் தேதி மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 3,03,371 வாக்காளர்களும் 388 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 2,76,156 வாக்காளர்களும், 393 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,73,456 வாக்காளர்களும், 368 வாக்குச்சாவடி மையங்களும், மானாமதுரை சட்டமன்ற 2,57,616 வாக்காளர்களும், 369 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன.

வாக்குப்பதிவு முடிந்து 11 நாட்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது, அழகப்பா பொறியியல் கல்லூரி பிரதான கட்டிடம் முதல்தளத்தில் திருப்பத்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமும், இரண்டாம் தளத்தில் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு இருந்தது.

காரைக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் வரைபட அறையிலும், முதல் தளத்தில் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு இருந்தது. மானாமதுரை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் முருகப்பா அரங்கம் தரைத்தளத்திலும், பாதுகாப்பு அறை முன்புறம் உள்ள முதல் தளத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. சிவகங்கை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம், பாதுகாப்பு அறை அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்தது. அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணிக்கை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளை கலெக்டர் பொற்கொடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags : Alagappa Government Engineering College ,Karaikudi ,District Election Officer ,Collector ,K.Polkodi ,Tamil Nadu… ,
× RELATED வெளிவட்ட சுற்றுச்சாலையை ஒட்டி புதிய ரயில் வழித்தடம் அமைகிறது