×

கிராமங்களில் இருக்கும் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதி வேண்டும்: வாக்காளர்கள் வலியுறுத்தல்

சாயல்குடி, மார்ச் 20: ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமங்களில் உள்ள பெரும்பான்மையான வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வசதிகளை செய்து தர வேண்டும் என அலுவலர்கள், வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2,97,310 வாக்காளர்கள், பரமக்குடியில் 2,33,433, திருவாடானையில் 2,82,121, ராமநாதபுரத்தில் 3,10,165 பேர் என மொத்தம் 11,23,029 பேர் வாக்காளர்களாக உள்ளனர். வருகின்ற சட்டமன்ற தேர்தல் ஏப்.23ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக இந்த 4 தொகுதிகளிலும் 1,514 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஊரக பகுதிகளில் பெரும்பாலான அரசு பள்ளிகள், ஒரு சில ஊராட்சி சமுதாய கூடங்கள் வாக்குசாவடி மையங்களாக உள்ளன. தேர்தல் நடத்தும் பணியில் 7,267 பேர் ஈடுபட உள்ளனர்.
போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பூத் ஏஜென்ட்களும், பவர் ஏஜென்ட்கள், போலீசார், அவசர உதவிகளை செய்து கொடுக்க உள்ளூர் பகுதியை சேர்ந்த வருவாய்துறை, ஊரக வளர்ச்சித் துறையினர், வாக்கு சாவடி மையத்தில் இருப்பர். வாக்காளர்களும் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் வந்து வாக்களிக்க வருவர்.
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு செய்யும் அன்றைய தினத்திற்கு முந்தைய தினம் மாலைக்குள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு செலுத்தும் இயந்திரம் வந்து விடும். தேர்தல் நடத்தும் அலுவலர்களும் வந்து விடுவர்.
ஆனால் ஊரக பகுதியில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகள், ஊராட்சி சமுதாய கூடம் கட்டிடங்களில் குடிநீர் வசதி, தண்ணீருடன் கூடிய குளியலறை, கழிவறை இல்லை. மின்விளக்குகள் எரியாமலும், மின்விசிறிகள் இல்லாமலும் உள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு தபால் ஓட்டு முறை இருந்தாலும், சிலர் விருப்பப்படி வாக்குச்சாவடி மையத்திற்கு எளிதாக வந்து செல்ல அமைக்கப்பட்ட சாய்தள பாதை கட்டுமானங்களும் உடைந்து கிடைக்கிறது.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவரும் வெளியூரை சேர்ந்தவர்களாக இருப்பர். தேர்தல் நடத்த வரும் அலுவலர்களில் குறிப்பாக பெண் அலுவலர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும் நிலை உள்ளது. எனவே வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Sayalgudi ,Ramanathapuram district ,Muthukulathur ,Ramanathapuram ,
× RELATED வெளிவட்ட சுற்றுச்சாலையை ஒட்டி புதிய ரயில் வழித்தடம் அமைகிறது