×

சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

சோழவந்தான், மார்ச் 20: சோழவந்தானில் உள்ள ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில், ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறும் பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சோழவந்தானில் வரலாற்று சிறப்பு மிக்க, சுமார் 1500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஜெனக நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரமோற்சவ விழா 11 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதன்படி 50ம் ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக காலை பார்த்தசாரதி பட்டர் குழுவினரால் யாகசாலை பூஜைகள் முடிந்து, கொடியேற்றத்திற்கான பூஜை பொருட்கள் நான்கு ரத வீதிகளில் மேள தாளத்துடன் எடுத்து வரப்பட்டது.

பின்னர் கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் முன்னிலையில், வேத மந்திரங்கள் முழங்க காலை 11 மணியளவில் கொடியேற்றப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த  தேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் 29ம் தேதி வரை நடைபெறும் இந்த பிரமோற்சவ விழாவில், ஆஞ்சநேயர், சிம்மம், கருடன், அன்னம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் நாள்தோறும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். முக்கிய நிகழ்வாக மார்ச் 25ம் தேதி காலை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் மாலதி, சரக ஆய்வாளர் ஜெயலெட்சுமி, செயல் அலுவலர் தாரணி, கணக்கர் முரளிதரன் மற்றும் கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Cholavandhan Jenaka Narayana Perumal Temple Brahmotsava Festival ,Cholavandhan ,Brahmotsava festival ,Jenaka Narayana Perumal Temple ,Cholavandhan… ,
× RELATED வெளிவட்ட சுற்றுச்சாலையை ஒட்டி புதிய ரயில் வழித்தடம் அமைகிறது