×

பழநி-கொடைக்கானல் சாலையில் உலா வரும் காட்டு யானை

பழநி, மார்ச் 20: பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் உள்ளன. இவை அடிக்கடி உணவு மற்றும் குடிநீரை தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து விடுவது வழக்கம். இந்த யானைகள், அங்கு விளைவிக்கப்பட்டிருக்கும் பயிர் வகைகளை நாசம் செய்வதும், வீடுகளை இடித்து தள்ளுவதும் என அட்டகாசம் செய்து வருகின்றன. கோடை வெயிலின் காரணமாக வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது. இதனால் உணவு மற்றும் குடிநீருக்காக யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து விடுவது அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களாக பழநி-கொடைக்கானல் சாலையில் ஒற்றை யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தேக்கந்தோட்டம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மாலை நேரங்களிலேயே ஒற்றை யானை உலாவுகின்றது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. தவிர, சாலைகளிலும் ஹாயாக நடந்து செல்கிறது. சாலைகளில் செல்வதை படம்பிடித்த பொதுமக்கள் சிலர் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. யானை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகளும் கடும் அச்சத்தில் உள்ளனர்.

கோடை சீசன் துவங்க உள்ள நிலையில் கொடைக்கானலுக்கு இவ்வழித்தடத்தில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் செல்வது வழக்கம். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் சாலையில் உலவும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palani-Kodaikanal road ,Palani ,Ottanchathram ,
× RELATED தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு...