×

ஜவ்வாக இழுக்கும் தொகுதி பங்கீடு: 41 சீட்டு கேட்கிறது பாஜ; 25 தான்னு எடப்பாடி கறார்; 2 முறை மணி நேரம் பேச்சுவார்த்தை வேஸ்ட்

அதிமுக- பாஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் இழுபறியாகவே உள்ளது. பாஜ மேலிடம் அழைத்ததன் பேரில் டெல்லிக்கு சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். ஆனால் அதிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் கடந்த 11ம் தேதி திருச்சியில் தே.ஜ. கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் காலையில் நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து மாலையில் மோடி கூட்டம் முடிந்து மீண்டும் 2வது முறையாக ஓட்டலில் எடப்பாடியை, பியூஷ் கோயல் நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஓட்டலில் காலை மற்றும் மாலை என 2 முறை… 2 மணி நேரம்… நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.

இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, ‘‘அதிமுக வலுவாக உள்ள சில தொகுதிகளை பாஜ கேட்கிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, சிங்காநல்லூர், நீலகிரி, மேட்டுப்பாளையம் மற்றும் தென் மாவட்டத்தில் நாங்குநேரி உள்ளிட்ட சில தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என்று பாஜ அடம் பிடிக்கிறது. ஆனால் இந்த தொகுதிகளை விட்டுத்தர எடப்பாடி சம்மதிக்கவில்லை. அதேபோல் 25 சீட் மட்டுமே தர முடியும் என்று அதிமுக கூறுகிறது. பாஜ கட்டாயம் 41 சீட்டுகள் வேண்டும் என்கிறது. இந்த பிரச்னைகள் தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுக முடிவை எட்டாததற்கு காரணம். எங்களுக்கு மட்டும் நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுத்து விடுங்கள். கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு நீங்கள் கொடுக்கும் தொகுதிகளை அவர்கள் வாங்கி கொள்ளட்டும் என்று பியூஷ் கோயல் கூறியுள்ளார். அதற்கு நாங்கள் கொடுக்கும் தொகுதிகளை நீங்கள் வாங்கி கொள்ளுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி கறாராக அவரிடம் கூறியுள்ளார்.

தொகுதி பங்கீட்டில் பாஜவினர் காட்டும் கறார், எடப்பாடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால்தான், மோடியை வரவேற்க ஏர்போர்ட் செல்லவில்லை என கூறப்படுகிறது. அதிமுக- பாஜ இடையே பேச்சுவார்த்தை முடிந்தால் தான் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற சூழல் தற்போது உள்ளது. இதனால் ஜி.கே.வாசன், டிடிவி.தினகரன், அன்புமணி ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே எடப்பாடியை மீண்டும் டெல்லிக்கு வரவழைத்து அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருக்கிறது’’ என்றனர்.

* மோடியை புறக்கணித்த எடப்பாடி
தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கடந்த 11ம் தேதி மாலை 4.40 மணிக்கு திருச்சி ஏர்போர்ட்டுக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. அதேபோல் பொதுக்கூட்டம் முடிந்து புறப்பட்டு சென்ற போது பிரதமரை வழியனுப்பவும் எடப்பாடி செல்லவில்லை.

* நாதக மாஜி காளியம்மாள் அதிமுகவில் இணைந்தார்
நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு விலகிய காளியம்மாள் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் இறுதியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சென்னை, பசுமைவழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அப்போது நாகப்பட்டினம் அதிமுக மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்தபோது மனைவி கயல்விழிக்கு, சீமான் பொதுச்செயலாளர் பதவியை கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த பதவியை தனக்கு தர வேண்டும் என கேட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகினார். கட்சியில் இருந்து விலகிய அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசினார். பிறகு திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளிடம் காளியம்மாள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இணைந்து 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதுபோல் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் வடசென்னையிலும், 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியிலும் போட்டியிட்டார். அப்போது மைக் சின்னத்தில் போட்டியிட்ட அவர் 1.25 லட்சம் வாக்குகளை பெற்று நாதக வேட்பாளர்களிலேயே அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* எம்எல்ஏ சீட்டுக்கு ரூ.10 கோடி டெபாசிட்: விருப்ப மனு வாங்கிய அதிமுகவினர் ஓட்டம்
சேலம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு 386 பேர் விருப்ப மனுக்ளை வழங்கியுள்ளனர். கடந்த முறை சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியதால், மீண்டும் தேர்தல் களத்தில் வெற்றியை ருசிக்க முடியும் என்ற ஆசையில், அதிமுக தலைமையிடம் பலர் சீட் கேட்டு விருப்ப மனு வழங்கியிருந்தனர். இந்நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், முன்பணமாக 10 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாராம். இதனால் விருப்பமனு வாங்கியவர்கள் தலைதெறிக்க ஓடிவிட்டனர்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘வழக்கமாக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், விருப்ப மனு வழங்கியவர் ஏழையாக இருந்தாலும், கட்சிக்காக உழைத்தவர்களாக இருந்தால் ‘கை’ தூக்கி விடுவார். மேலும், சீட் வழங்குவதுடன் தேர்தல் செலவுகளையும் கட்சி தலைமையே பார்த்து கொள்ளும் நிலை இருந்தது. தற்போது, வசதி படைத்தவர்களுக்கு மட்டும் சீட் ஒதுக்கி வருகின்றனர். ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் ரூ.10 கோடி முன்பணம் செலுத்த வேண்டும் என பொதுச்செயலாளர் கூறியுள்ளதால் தேர்தலில் களம் இறங்க ஆவலாக இருந்தவர்கள் பின்வாங்கியுள்ளனர்.

தங்களுக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில், அதை வைத்து முக்கியஸ்தர்கள், ெதாழிலதிபர்கள், பிரபல நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து பெரும் தொகையை வசூல் செய்து கொள்ளலாம் என பலர் காத்திருந்தனர். இவ்வாறு வசூலாகும் தொகை கணக்கில் வராது, பதுக்கி கொள்ளலாம் என தயாராக இருந்தனர். அந்த கனவை பொதுச்செயலாளர் சிதைத்து விட்டார். இதன்காரணமாக தற்போதைய முன்பண உத்தரவு விவகாரத்தால், விருப்ப மனு வழங்கியதோடு பலர் ஒதுங்கி விட்டனர்’’ என்றனர். அதே நேரத்தில் ரூ.10 கோடி முன்பணம் விவகாரத்தில் பலர் ஓட்டம் பிடித்தாலும், மாஜி எம்எல்ஏ ஒருவர் மட்டும் தேர்தல் களத்தில் கேட்ட பணத்தை கட்டி மீண்டும் களம் காண முழுவீச்சில் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags : Adimuka-Baja alliance ,Eadapadi Palanisami ,Delhi ,Union Interior Minister ,Amitsha ,Bajaj Mahal ,
× RELATED உங்க கட்சிகாரங்க மற்ற பெண்களை பற்றி...