×

தனி தொகுதிகளே இல்லாத நெல்லை, குமரி மாவட்டங்கள்

இந்திய அரசியல் சாசனம், தலித் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளை பெறும் வகையிலும், அவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையிலும் தனித்தொகுதிகளை வரையறுத்துள்ளது. இதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மட்டுமே போட்டியிட முடியும். சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கோ நடக்கும் தேர்தல்களில், சில குறிப்பிட்ட தொகுதிகள் தனித்தொகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 20 சதவீதம் அதாவது, 46 தனித்தொகுதிகள் உள்ளன.

இதில் தென்மாவட்டங்களில் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தனி தொகுதிகள் உள்ளன. நெல்லை ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது 10 தொகுதிகளில் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய இரண்டு தனி தொகுதிகள் இருந்தன. ஆனால் தென்காசி மாவட்டம் பிரிந்த போது தனி தொகுதிகள் இரண்டும் அந்த மாவட்டத்திற்கு சென்று விட்டன. இதனால் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தனி தொகுதிகளே இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் தொகுதி தனி தொகுதியாக உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 தொகுதிகள் இருந்தும், ஒரு தொகுதி கூட தனித்தொகுதியாக இல்லை. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை தற்போதுள்ள பாளையங்கோட்டை, நெல்லை, நாங்குநேரி, அம்பை, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளும் பொது தொகுதிகளாகவே உள்ளன. இந்த தொகுதிகளில் ஏதாவது ஒன்றை தனி தொகுதியாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தாலும், அதற்கான வாய்ப்புகள் இன்னமும் அமையவில்லை. இதன் காரணமாக நெல்லை, குமரி மாவட்டங்களில் காணப்படும் தலித் அரசியல் பிரதிநிதிகள் வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

குறிப்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன், நெல்லையில் இருந்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களவை தேர்தல் என்றால் தென்காசி தனித்தொகுதியையும், சட்டசபை தேர்தல் என்றால் சங்கரன்கோவில் அல்லது வாசுதேவநல்லூர், சென்னையில் எழும்பூர் என வெளிமாவட்ட தொகுதிகளையே தேடிச் செல்ல வேண்டியதுள்ளது. புதிய தமிழகம் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமியும் வெகுகாலமாக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியையே சுற்றிச்சுற்றி வரவேண்டியதுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பிற அரசியல் கட்சிகளில் உள்ள தலித் முக்கியஸ்தர்களும், சட்டசபை தேர்தல் என வந்துவிட்டால், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ஓட்டப்பிடாரம் என வெளிமாவட்ட தொகுதிகளை தேடிச் சென்று பணம் கட்ட வேண்டியுள்ளது. வருங்காலங்களிலாவது தனித்தொகுதிகளுக்கான பங்களிப்பு சமச்சீர் விகிதத்தில் இருக்குமா என்பது தலித் பிரதிநிதிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

* மாஜி எம்எல்ஏ ‘டாட்டா’: அமமுக கூண்டோடு காலி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில், ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான என்.ஜி.பார்த்திபனுக்கு சீட் வழங்கவில்லை. இதனால் அமமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். அதைத்தொடர்ந்து, சோளிங்கரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பார்த்திபன் பேசுகையில், அமமுகவுக்கு கடந்த 9 ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன். டிடிவி தினகரனுக்கு விசுவாசமாக இருந்தேன். என்னைப்போன்று பலர் கட்சிக்காக உழைத்தனர்.

அவர்களுக்கும் பல்வேறு தொகுதிகளில் எம்எல்ஏ சீட்டு வழங்கப்படவில்லை. பலர் சூழ்ச்சி செய்து எனக்கு எம்எல்ஏ சீட்டு கிடைக்காமல் செய்தனர். பல்வேறு காரணங்களால் அமமுகவில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நான் விலகுகிறேன். அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தெரியப்படுத்தப்படும் என்றார். முன்னதாக அமமுக அவைத்தலைவரும், முன்னாள் எம்பியுமான சி.கோபால், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் பல்வேறு கருத்துக்களை எடுத்து கூறி பேசினார். அவர்களும், அமமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதனால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமமுகவினர் கூண்டோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

* திருப்பூர் தெற்கு யாருக்கு…? இந்து முன்னணி, பாஜ குஸ்தி
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் திருப்பூர் தெற்கு மற்றும் அவிநாசி தொகுதிகளை பாஜ பெற்றுள்ளது. தொகுதியை பெற்ற மகிழ்ச்சியை விட வேட்பாளர் யார் என்ற குழப்பம் தான் இப்போது திருப்பூர் பாஜவினரை திக்குமுக்காடச் செய்துள்ளது. இதில் அவிநாசி தொகுதி ஒன்றிய அமைச்சர் எல்.முருகனுக்கு என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் திருப்பூர் தெற்கு தொகுதி யாருக்கு என்பதில் தான் மோதல் ஏற்பட்டடுள்ளது. இந்த முறை தனது மகனுக்கு எப்படியாவது சீட்டு வாங்கி களமிறக்கிட வேண்டும் என்ற கனவில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இது பாஜ நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், தாங்கள் புறக்கணிக்கப்படுவோம் என்ற அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இன்னொரு பக்கம், கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெற்குத் தொகுதியின் மீது கண் வைத்து காய் நகர்த்தி வருவது உள்ளூர் நிர்வாகிகளிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Nellai ,Kumari ,Dalits ,Legislative Assembly ,
× RELATED நாங்கள் விரும்பிய தொகுதிகள்...