×

10 சி கேட்டா 5 சி தானா? சீட்லாம் கிடையாது போ… சொந்த மாவட்டத்தில் 4 எம்எல்ஏக்களுக்கு கல்தா கொடுத்த எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதியில், கடந்த தேர்தலில் அதிமுக 8 இடங்களிலும், கூட்டணியில் இருந்த பாமக 2 இடத்திலும் வெற்றி பெற்றது. ஆனால் தற்போது நடக்க இருக்கும் தேர்தலில், 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சீட் கொடுக்காமல், எடப்பாடி பழனிசாமி கல்தா கொடுத்துள்ளார். ஏற்காடு தொகுதி சித்ரா, சேலம் தெற்கு தொகுதி பாலசுப்பிரமணியம், சங்ககிரி சுந்தர்ராஜன், வீரபாண்டி தொகுதி ராஜாமுத்து ஆகியோருக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அவர்களின் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

ஏற்காடு எம்எல்ஏ சித்ராவை பொருத்தவரையில் 2 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இம்முறை வாய்ப்பு கேட்டு விருப்ப மனு கொடுத்திருந்தாலும், வாய்ப்பு கிடைக்காததால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். சேலம் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் பாலசுப்பிரமணியம், இம்முறையும் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதில் தீவிரமாக இருந்துவந்தார்.

ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரும் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார். வீரபாண்டி தொகுதி எம்எல்ஏ ராஜாமுத்து, மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே வீரபாண்டி மாஜி எம்எல்ஏ மனோன்மணி, சீட்டை பெறுவதற்கான உறுதியை மேலிடத்தில் பெற்றுவிட்டார். எல்லா வழிகளிலும் முயன்றும் ராஜாமுத்துவுக்கு கிடைக்கவில்லை.

அதேபோல சங்ககிரி சுந்தர்ராஜன், ஆரம்பத்திலேயே ஒதுங்கிக்கொண்டார். இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘இம்முறை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ.10 கோடி வரை செலவு செய்ய தயாராக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியாக தெரிவிக்கப்பட்டது. இவர்களில் சிலருக்கு ரூ.5 கோடியை மட்டுமே தயார் செய்ய முடிந்தது. இதன்காரணமாக அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை’’ என்றனர்.

Tags : Edappadi Palaniswami ,Kaltha ,Salem district ,AIADMK ,PMK ,
× RELATED புதுச்சேரியில் ஆட்சியை தீர்மானிக்கும் சுயேச்சைகள்