×

பலர் வேண்டாம் என்று ஒதுங்கிய நிலையில் 5 தொகுதிகளுக்கான தமாகா வேட்பாளர்கள் அறிவிப்பு: சைக்கிள் கிடைக்காததால் தாமரையை தேர்வு செய்ததாக ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களை ஜி.கே.வாசன் அறிவித்தார். மேலும், சைக்கிள் சின்னம் கிடைக்காததால் பாஜவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் கூறினார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. தேர்வானவர்களின் பட்டியலையும் வெளியிட்டு வருகிறது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகா இடம்பெற்றுள்ளது. 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்குவதாக எடப்பாடி பழனிசாமி கூறியதால் பேச்சுவார்த்தையை ஜி.கே.வாசன் புறக்கணித்தார்.

இதையடுத்து, பாஜ மேலிட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, சென்னை வந்த ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலை நள்ளிரவில் சந்தித்து பேசினார். இதையடுத்து பாஜ தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதிகளில் தமாகாவை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். ஆனால் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதில் ஜி.கே.வாசன் உறுதியாக இருந்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, திமுகவின் கோட்டையாக கருதக்கூடிய 3 அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளை தமாகாவுக்கு ஒதுக்கினார். இதனால் எடப்பாடி பழனிசாமி பழிவாங்கி விட்டதாக தமாகாவினர் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் வெற்றி பெறக்கூடிய ஒரு தொகுதியை கூட கேட்டு வாங்கவில்லை என ஜி.கே.வாசனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் தமாகாவில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று காலை ஜி.கே.வாசன், தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார்.

அதன் அடிப்படையில், ஒட்டன்சத்திரம் – விடியல் எஸ்.சேகர் (தமாகா மாநில துணை தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ) ஈரோடு மேற்கு – எம்.யுவராஜா (தமாகா பொதுச் செயலாளர்), ராணிப்பேட்டை – வி.எம்.கார்த்திகேயன் (ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தமாகா தலைவர்), கிள்ளியூர் – சைமன் (தமாகா தென் மண்டல இளைஞரணி துணை தலைவர் கும்பகோணம் – எம்.கே.ஆர் அசோக் குமார் (தமாகா மாநில செயலாளர்) ஆகிய 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

இதை தொடர்ந்து, ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: எங்களுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்காததால் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். தேசிய அளவில் தாமரை சின்னம் இரட்டை இன்ஜின் சின்னம் என்பதாலும், பாஜவுடன் நாங்கள் நேரடி கூட்டணியில் இருப்பதாலும் அவர்களின் சின்னத்தில் போட்டியிடுகிறோம். சின்னம் என்பதை விட களப்பணியும், கூட்டணியின் பலமும்தான் முக்கியம். தாமரை சின்னத்தில் போட்டியிடுவதை விமர்சிக்கும் காங்கிரசை காமராஜரின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது. 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அடுத்தமுறை விரும்பும் சின்னத்தில் போட்டியிடுவதே எங்கள் இலக்கு.

கட்சியில் சில நிர்வாகிகளுக்கு சீட் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளதாக கூறுகிறீர்கள். தேர்தல் நேரங்களில் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது மனித இயல்பு தான், வாய்ப்பு கிடைக்காத நிர்வாகிகளின் வருத்தம் நியாயமானது தான். அவர்கள் கட்சியின் வெற்றிக்காக தொடர்ந்து பணியாற்றுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், தமாகா பொதுச் செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், ராஜம் எம்பி நாதன், ராணி கிருஷ்ணன், துணைத் தலைவர்கள் முனவர் பாஷா, சக்தி வடிவேல், மாவட்ட தலைவர் வேணுகோபால், வர்த்தக அணி நிர்வாகி ஆர்.எஸ்.முத்து உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

Tags : Tamaaga ,G.K. Vasan ,Chennai ,BJP ,Tamil Nadu ,
× RELATED நாங்கள் விரும்பிய தொகுதிகள்...