×

போர் காரணமாக மேற்காசிய பிராந்தியத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உடனடியாக தாய்நாட்டிற்கு திரும்புவதற்கு நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக மேற்காசிய பிராந்தியத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை உடனடியாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவதை உறுதி செய்திட பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதம்: தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமானோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வளைகுடா பகுதி முழுவதும் வேலை செய்து வருகிறார்கள். இந்த நாடுகளில் 19 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அங்கு நாளுக்கு நாள் தற்போது நிலவி வரும் பாதுகாப்பு நிலைமை அவர்களுக்கும், தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மற்றும் மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போரினால், மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் தற்போது சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த மக்களின் பாதுகாப்பு மற்றும் வெளியேற்றம் தொடர்பாக பிரதமர் தலையீட்டை கோருகிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிடும் வகையில், தமிழ்நாடு அரசு, சென்னையிலும், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் 24 X 7 அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. அதன்மூலம் இதுவரை உதவி கோரி சுமார் 2,600 அழைப்புகள் வந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இந்தியாவுக்கு திரும்புவதற்கான உதவியை கோரியும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விமானங்கள் கிடைப்பது குறித்து தெளிவு கோரியும் வந்துள்ளது.

இந்த அழைப்புகள் மற்றும் அதைத்தொடர்ந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சிக்கி தவிக்கும் சுமார் 1,000 தமிழர்களின் விவரங்கள் ஏற்கெனவே தொகுக்கப்பட்டு, தேவையான தொடர் நடவடிக்கை மற்றும் உதவிக்காக வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியத்தில் உள்ள சம்பந்தப்பட்ட இந்திய தூதரகங்களுடன் அவை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் காரணமாக, பஹ்ரைன், குவைத் போன்ற நாடுகளின் சில இடங்களில் இருந்து விமான நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன. இதன் விளைவாக, சிக்கி தவிக்கும் பலர் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற அண்டை நாடுகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு சாலை வழியாக பயணிக்க வேண்டியுள்ளது. இந்தியாவுக்கு அவர்களை திருப்பி அனுப்ப உரிய விசாக்கள் முக்கியமான தேவையாக தற்போது உள்ளது.

மேலும், சிக்கி தவிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக தற்போது செயல்பட்டு வரும் விமான நிலையங்களை அடைந்து, விரைவில் இந்தியா திரும்புவதற்கு தேவையான போக்குவரத்து அனுமதிகள் மற்றும் விசாக்களை வழங்க இந்திய அரசு உரிய வசதிகளை செய்து தர வேண்டும். இன்றைய நிலவரப்படி, வெளிநாட்டு விமான போக்குவரத்து மூலம், அங்கு சிக்கி தவித்த 5,256 பயணிகள் 16 விமானங்களில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்களை வெளியேற்ற கோருவதை கருத்தில் கொண்டு, பாதுகாப்பாகவும், சரியான நேரத்திலும் அவர்கள் சென்னைக்கு திரும்புவதற்கு வசதியாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூடுதலாக சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்திட வேண்டும்.

அதேபோன்று, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 593 மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு, ஈரானில் உள்ள தீவுகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களை பத்திரமாக தாயகம் கொண்டுவர மீனவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மீனவர்களின் பாதுகாப்பையும், அவர்கள் பாதுகாப்போடு தாயகம் திரும்புவதையும் உறுதி செய்திட ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேற்கு ஆசிய பிராந்தியத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உடனடியாக உரிய உதவிகளை செய்திடவும், அவர்களை பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவதை உறுதி செய்வதற்கு விரைவான நடவடிக்கைகளை எடுத்திடவும், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : West Asian region ,PM ,K. Stalin ,Chennai ,Iran ,-Israel ,Shri Narendra Modi ,
× RELATED மினி ஜவுளி பூங்காக்கள்; சொன்னாரு..! செஞ்சாரு..!!