×

பெண்களை இழிவாக பேசும் அதிமுக தலைவர்களால் எப்படி பாதுகாப்பான ஆட்சியை கொடுக்க முடியும்? தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத்

 

1 அதிமுக தலைவர்கள் தொடர்ந்து பெண்களை இழிவாக பேசி வருவது பற்றி?
பாஜவை பொறுத்தவரை அவர்கள் ஆளும் வடமாநிலங்களில் பெண்கள் விரோத ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. தமிழகத்தில் அதிமுக என்பது பாஜவின் ஒரு பிம்பமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு சுயசிந்தனை என்பதே கிடையாது. சமீபத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டிக்கிறோம் எனக் கூறி அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நயன்தாராவை பற்றி இழிவாக பேசினார். திண்டுக்கல் சீனிவாசன், பெண்களுக்கு உள்பாவாடை கொடுப்பார்களா? என்று இழிவாக பேசுகிறார். இவர்கள் எல்லாம் பெண்களை ஒரு கேலிக் கூத்தாகவே பார்க்கிறார்கள். நக்கல், நையாண்டியாக பேசுகிறார்கள். இப்படிப்பட்ட அதிமுக தலைவர்களால் எப்படி பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியை கொடுக்க முடியும். இதற்கு முன்பு ஒரு பெண் ஆளுமைக்கு கீழே இருந்தார்கள் என்பதை மறந்து அவர்கள் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

2 காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்குமா? அதற்கான கோரிக்கை வைத்திருக்கிறீர்களா?
கட்சி ரீதியாக பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காங்கிரசில் தருவதற்கு யார் தடுக்கிறார்கள். யாரும் தடுக்கவில்லை என்றே நம்புகிறேன். அப்படி என்றால் பெண்களுக்கான வாய்ப்புகளை காங்கிரஸ் தலைமை கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 33 சதவீத அடிப்படையில் 9 தொகுதிகளில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தி இருக்கிறேன், தீர்மானமும் நிறைவேற்றி மேலிடத்துக்கு அனுப்பி உள்ளேன். எனவே பெண்களுக்கு இந்த தேர்தலில் கட்சி தலைமை முக்கியத்துவம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

3 தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
தேசிய க்ரைம் ரெக்கார்டு புள்ளி விபரங்களின் அடிப்படையில், இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் சென்னை தான். பெண்களுக்கு பாதுகாப்பு என்பது தமிழகத்தில் அதிகமாவே உள்ளது. சமீபத்தில் 0.2 சதவீதம் என்ற அளவில் ஒரு சில நிகழ்வுகள் நடப்பது வருந்தத்தக்கது. கோவை சம்பவத்துக்கு கூட்டணி ஆட்சி என்றாலும் நாங்கள் குரல் கொடுத்தோம். தமிழக காவல் துறையும், தமிழக அரசும் துரிதமாக நடவடிக்கை எடுக்கிறார்கள். மற்ற மாநிலங்களை போன்று குற்றவாளிகளை ஓடவிடுவதில்லை. பாஜவினர் தான் பெண்களை அதிகமாக துன்புறுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். அதை எல்லாம் பாஜ பெண்கள் தலைவர்களான தமிழிசை, குஷ்பு, வானி சீனிவாசன் போன்றவர்கள் எல்லாம் கேட்பதில்லை. ஒன்றிய பாஜ அரசு ஒருபோதும் பெண்களுக்கு பாதுகாப்பு தராது.

​4 நடிகர் விஜய் தொடங்கி கட்சிக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு இருக்குமா? அவரது விவகாரத்து விவகாரம் தேர்தலில் எதிரொலிக்குமா?
பதில்: தமிழகத்தில் நடிகர்களுக்கு என்று ஒரு தனி வரவேற்பு எப்போதும் உண்டு. எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார் என திரைக்கலைஞர்கள் அரசியலுக்கு வந்த போது பொலிட்டிகல் பிகராக தான் பார்த்தோம். அந்த வகையில் விஜய்க்கும் வரவேற்பு இருக்கத் தான் செய்யும். ஆனால் அந்த வரவேற்பு என்பது தேர்தலில் வெற்றி பெறக்கூடிய அளவில் இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். அவரது விவகாரத்து வழக்கு, நடிகையுடன் திருமணத்துக்கு வந்தது என அவரது நடவடிக்கைகளை தமிழ்நாட்டு பெண்கள் எவ்வாறு எடை போட்டுள்ளார்கள் என்பது தேர்தலில் தான் தெரியும்.

 

Tags : AIADMK ,Tamil ,Nadu Mahila Congress ,Hasina Syed ,BJP ,northern ,Tamil Nadu ,BJP… ,
× RELATED ஒரிஜினல் பாஜ, டூப் அதிமுக பொம்மலாட்ட...