பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இல்ல திருமணவிழா தஞ்சாவூரில் நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசியதாவது: இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு எந்த சூழ்நிலையில் வந்திருக்கிறேன் என்பதும் உங்களுக்கு தெரியும். நேற்று இரவு (நேற்றுமுன்தினம்) வரை கூட்டணி கட்சியோடு பேசி ஒரு ஒப்பந்தத்தை முடித்து விட்டு, அதுவும் வெற்றிகரமாக முடித்து விட்டு, எல்லோரும் பாராட்டக்கூடிய வகையிலே முடித்து விட்டு தான் இன்றைக்கு வந்திருக்கிறேன்.
இன்றைக்கு நீங்கள் எல்லாம் வாட்ஸ்அப்-ல, சோசியல் மீடியாவில பார்த்திருக்கலாம். அந்த ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரில் ஏறுகிற போது கையை எடுத்து இப்படி ஒரு சொல்… அந்த ஆக்ஷனோடு நான் ஏறிய காட்சியை பார்த்திருப்பீர்கள். அது நான் திட்டமிட்டு செய்தது அல்ல… ஏதோ காரில் ஏற வருகிற போது அங்கே எதிரே நின்று கொண்டிருக்கக்கூடிய பத்திரிகையாளர்கள் எல்லாம் பார்த்து ‘‘என்ன முடிந்துவிட்டதா, முடிந்துவிட்டதா?’’என்று கேட்டார்கள். ‘‘முடிந்து விட்டது’’ என்று சொன்னேன், அவ்வளவுதான்.
அது இன்றைக்கு பெரிய வைரலாகி ‘‘எல்லாம் முடிந்துவிட்டது, ஆல் பினிஷ்டு’’ அப்படின்னு சொல்ற மாதிரி இன்றைக்கு அந்த காட்சிகள் எல்லாம் வெளியாகி கொண்டிருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆகவே அந்த மகிழ்ச்சியோடுதான் வந்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, இந்த திருமணத்தை முடித்துவிட்டு ராஜ்யசபாவிற்கு வேட்பாளர்களாக இரண்டு பேரை அறிவித்திருக்கிறோம், கூட்டணி கட்சிக்கு இரண்டு பேருக்கு கொடுத்திருக்கிறோம். இரண்டு இடங்களை கொடுத்திருக்கிறோம்.
அந்த நான்கு பேரும் 12 மணி அளவிலே சென்னையில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இன்று தான் கடைசி நாள். நான் வந்தே தீர வேண்டும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். நாம் வழக்கமாக செல்வது உண்டு. ஆகவே இதை முடிச்சுட்டு உடனடியாக நான் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினால்தான் வேகவேகமாக வந்து வேகவேகமாக திருமணத்தை முடித்து வைத்து விட்டு நான் செல்லவிருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். திருமண நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
