சென்னை : விசிக வேட்பாளர்கள் தேர்வில் எந்த உள்நோக்கமும் இல்லை என அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தலையொட்டி விசிக தலைவர் திருமாவளவன் முகநூலில் பேசியதாவது: விசிக வேட்பாளர்கள் 8 பேரும் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறோம். விசிக சார்பில் விருப்ப மனு பெற்றது மூலம் 1 கோடிக்கு மேல் கட்சி வங்கிக்கு வந்து சேர்ந்தது. இது 8 வேட்பாளர்களுக்கும் முதல் கட்டமாக 10 லட்சம் பிரித்து அளிக்கப்பட்டது. மேலும் புச்சேரியில் போட்டியிடும் 4 வேட்பாளர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். 4 சட்டமன்ற உறுப்பினர்களும் சிறப்பாகப் பணியாற்றினர். விசிகவிற்கு அவர்கள் பெருமை சேர்த்துள்ளனர். நன்றாகப் பணியாற்றியவர்களுக்கு ஏன் இந்த முறை சீட் வழங்கவில்லை என்ற கேள்வி எழுவது இயல்புதான். ஆனால் இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஒரு முறை கூட சீட் தரவில்லை என்று எத்தனையோ நபர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி, ஆண்களுக்கு மட்டும் தருவீர்கள், பெண்களுக்கு தர மாட்டீர்களா என்ற கேள்வி, நிர்வாகிகளுக்கு மட்டும் இல்லாமல் அதற்குக் கீழ் உள்ளவர்களுக்கும் தரக் கூடாதா என்ற கேள்வி என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கியது என்ற என் முடிவை அவர்கள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆளூர் ஷாநவாஸ் எங்கு பேசினாலும் அது நம் கட்சிக்கு வலு சேர்க்கும். நாகை மீண்டும் கிடைத்திருந்தால் ஆளூர் ஷாநவாஸுக்கே தந்திருப்பேன். ஆனால் அது ஜவாஹிருல்லாவுக்கு சென்றுவிட்டது. விசாரித்ததில் ஆளூர் ஷாநவாஸ் ராயபுரத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அவருக்காக நான் சீட் கேட்டேன். அதற்குப் பிறகு பல்லாவரம் வேண்டும் என்று கேட்டார். ஆனால் அது தேமுதிகவிற்கு சென்றுவிட்டது.
ஷாநவாஸ் கூடாது, அவரைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவு இல்லை. அப்துல் ரகுமானுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்ற எண்ணத்தில் கொடுக்கப்பட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எஸ்.எஸ். பாலாஜி என் தலைமை மீது நம்பிக்கை வைத்து, என் முடிவை அவருக்கு நியாயம் தெரியும் என்ற நம்பிக்கையில் எடுத்த முடிவு.
எனவே விசிக வேட்பாளர்கள் தேர்வில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் பாபு ஆகியோர் தங்கள் மன வேதனையை என்னிடம் தெரிவித்தார்கள். இருப்பினும் இதற்குப் பிறகு கட்சிப் பொறுப்பு ஏற்று பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் முகநூலில் தோழர்கள் எழுதக் கூடாது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
