×

வெஸ்ட் இண்டீசை விரட்டி அரையிறுதிக்கு இந்தியா தகுதி; சாம்சனின் கடின உழைப்பு வீண்போகவில்லை: கேப்டன் சூர்யகுமார் பாராட்டு

கொல்கத்தா: ஐசிசி டி.20 உலக கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் கொல்கத்தாவில் நேற்று நடந்த கடைசி போட்டியில் குரூப் 1ல் நடப்பு சாம்பியன் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன் எடுத்தது. ரோஸ்டன் சேஸ் 40, ஜேசன் ஹோல்டர் நாட்அவுட்டாக 37, பாவல் 34, ரன் அடித்தனர். இந்திய பவுலிங்கில் பும்ரா 2 விக்கெட் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா, இஷான்கிஷன் தலா 10 , கேப்டன் சூர்யகுமார் 18 ரன், திலக் வர்மா 27, பாண்டியா 17 ரன்களில் அவுட் ஆகினர். சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆட்டமிழக்காமல் 50 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 97 ரன் விளாசி கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இதன் மூலம் 19.2 ஓவரில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் குரூப் 2ல் 2வது இடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது. சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் கூறியதாவது: உண்மையிலேயே எங்கள் வீரர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இன்று விளையாடிய விதம், வீரர்கள் திறனையும், குணத்தையும் காட்டியிருக்கிறார்கள். இந்த தொடரில் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வருகிறோம். எனவே அரை இறுதிக்கு செல்ல அனைத்து தகுதிகளும் எங்களுக்கு உள்ளது. எப்போதுமே சாம்சனிடம் சொல்வது ஒன்றே ஒன்றுதான். நல்ல மனிதர்களுக்கு, அவர்கள் காத்திருந்தால் எப்போதுமே நல்ல விஷயம் நடக்கும். சாம்சன் பல நாட்களாக காத்திருந்தார். அவருடைய கடும் உழைப்பும், மூடிய திரையில் அவர் மேற்கொண்ட பயிற்சி, அனைத்தும் இன்று வீண் போகவில்லை.

அதற்கான வெற்றிக்கனியை இன்று அவர் ருசிக்கிறார். பந்துவீச்சில் எங்களுடைய திட்டத்திற்கு ஏற்ற வகையில் செயல்பட்டனர். இங்கு 200 ரன்னை சேஸ் செய்ய முடியும் என தெரியும். பனிப்பொழிவு இருக்கும் என்பதால் பந்து பேட்டிற்கு நன்றாக வரும். சின்ன சின்னதாக பார்ட்னர்ஷிப் சேர்த்து வெற்றியை நோக்கி நகர்த்தியதுதான் வெற்றிக்கு காரணம். சொந்த மண்ணில் விளையாடுவதால், எப்போதுமே நெருக்கடி அழுத்தம், பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.
அழுத்தம் இல்லை என்றால் கொண்டாட்டமும் இல்லை. அழுத்தம் இருக்கும் போது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் எல்லாம் பறக்கும். எனினும் இதை எப்படி நாம் புரிந்து கொண்டு எப்படி விளையாடுகிறோம் என்பதில்தான் வெற்றியே இருக்கிறது, என்றார். இந்திய அணி அரையிறுதியில் வரும் 5ம் தேதி வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துடன் மோத உள்ளது. முன்னதாக 4ம்தேதி முதல் அரையிறுதியில் கொல்கத்தாவில் தென்ஆப்ரிக்கா-நியூசிலாந்து மோதுகிறது.

எனது வாழ்க்கையில் மிகச் சிறந்த நாள்;
ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன் கூறியதாவது: உண்மையிலேயே இந்த இன்னிங்ஸ் மூலம் அணியை வெற்றி பெற வைத்தது மகிழ்ச்சி. இன்று என் கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் ஸ்பெஷல் ஆனது. கிரிக்கெட் கேரியரில் பல உச்சம், சரிவுகளை சந்தித்து இருக்கிறேன். என் திறமை மீது எனக்கே பலமுறை சந்தேகம் வந்திருக்கிறது. ஆனால் இன்று கடவுள் எனக்கு ஆசீர்வாதம் தந்திருக்கிறார். அதற்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 10 ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்தாலும் வெறும் 60 போட்டிகள் தான் ஆடி இருப்பேன். ஆனால் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து 100 போட்டிகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன். ரோகித், டோனி, கோஹ்லி போன்ற ஜாம்பவான்களை பார்த்து கற்றுக்கொண்டிருக்கிறேன். இன்று இவ்வளவு பெரிய இன்னிங்ஸ் ஆடுவேன் என நினைக்கவில்லை. உண்மையிலேயே எனது வாழ்க்கையில் மிகச் சிறந்த நாள், என்றார்.

இன்னும் கூடுதல் ரன் எடுத்திருக்க வேண்டும்;
வெஸ்ட்இண்டீஸ்கேப்டன் ஷாய் ஹோப் கூறியதாவது: இந்த மைதானம் சேசிங்கிற்கு மிகவும் சாதகமான ஒன்றாகும். எனவே, நாங்கள் எடுத்த ரன் சற்று குறைவு தான். ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இன்னும் கூடுதலாக ரன் எடுத்திருக்க வேண்டும். சாம்சன் மிகச் சிறப்பான இன்னிங்ஸை ஆடினார். இந்தியா வெற்றி பெற்றதற்கான முழு பாராட்டுகளும் அவருக்கே சேர வேண்டும். பும்ரா இந்தியாவின் மிக முக்கியமான பவுலர். அவர் கையில் பந்து இருக்கும்போதெல்லாம் ஆட்டத்தில் நிச்சயம் ஒரு திருப்புமுனை ஏற்படும். இந்த தொடர் முழுவதும் எங்கள் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. பவுலர்களை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் இன்று வெற்றிக் கோட்டைத் தொட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது, என்றார்.

இந்தியாவின் அதிகபட்ச ரன் சேசிங்!
*நேற்று 196 ரன்னை சேசிங் செய்தது தான் உலக கோப்பையில் இந்தியாவின் அதிகபட்ச ரன்னாகும். இதற்கு முன் 2014ல் தென் ஆப்பிரிக்காவுக்குஎதிராக 173 ரன்னை சேசிங் செய்ததே அதிகமாக இருந்தது.
*உலக கோப்பையில் ஒட்டுமொத்தமாக இது 3வது அதிகபட்ச ரன். இதற்கு முன் 2016ல் தென் ஆப்பிரிக்காவுக்குஎதிராக இங்கிலாந்து 230, 2007ல் வெ.இ.க்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 206ரன்னை விரட்டியிருந்தது.
* சஞ்சு 97 ரன்எடுத்தது டி.20உலக கோப்பையில் இந்திய வீரரின் 2வது அதிகபட்ச ரன். இதற்குமுன் 2010ல் ரெய்னா,தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 101 ரன் அடித்திருந்தார்.
*உலக கோப்பையில் சேசிங்கில் அதிக ரன் எடுத்தவர் சஞ்சு தான்.இதற்கு முன் 2022ல் பாக்.கிற்கு எதிராக கோஹ்லி நாட் அவுட்டாக 82 ரன் எடுத்திருந்தார்.
*வெ.இண்டீஸ் அணிக்காக அதிக சிக்சர் (150) அடித்தவர் என்ற சாதனையை ரோவ்மன் பவல் படைத்தார். இதற்குமுன் பூரன் 149 சிக்சர் அடித்திருந்தார்.
*ஈடன்கார்டனில் 2011ல் முதல் போட்டியில் இங்கி.க்கு எதிராக தோல்விக்கு பின் 8 போட்டியில் தொடர்ச்சியாக இந்தியா வென்றுள்ளது. இதில் 5 வெஸ்ட் இண்டீசுக்கு எதிரானது.
*டி.20 உலக கோப்பையில் இந்தியா 6வது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. பாக், இங்கிலாந்தும் 6 முறை அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.

பும்ராவுக்கு சச்சின் பாராட்டு: இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘‘பும்ரா உங்களை பந்தைத் தொட வைக்கிறார்… பிறகுதான் நீங்கள் பந்தின் போக்கை உணர்கிறீர்கள். உங்கள் பேட்டின் வேகம் இவருக்கு இணங்கவில்லை என்றால், நீங்கள் அவரின் வலையில் சிக்கிவிடுவீர்கள்.இதுவே பந்துவீச்சின் வேகத்தை மாற்றும் கலை, இப்படிப்பட்ட தருணங்கள்தான் நெருக்கமான ஆட்டங்களின் முடிவை தீர்மானிக்கின்றன’’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : India ,West Indies ,Samson ,Suryakumar ,Kolkata ,ICC T20 World Cup Super 8 round ,
× RELATED பிரேக் செஸ் சாம்பியன்ஷிப் எட்டும் தூர...