×

மேஜர் லீக் கால்பந்து: மந்திர கால்களால் தந்திரமாய் 2 கோல்

ஓர்லேண்டோ: மேஜர் லீக் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று, லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஓர்லேண்டோ சிட்டி அணியை வெற்றி கண்டது. மேஜர் லீக் கால்பந்து (எம்எல்எஸ்) போட்டி அமெரிக்காவின் ஓர்லேண்டோ நகரில் நேற்று நடந்தது. அதில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணியும், ஓர்லேண்டோ சிட்டி அணியும் மோதின. போட்டியின் துவக்கத்தில் ஓர்லேண்டோ அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர்.

போட்டியின் 18வது நிமிடத்தில் அந்த அணியின் மார்கோ பாஸாலிக் அட்டகாசமாக ஆடி, தனது அணியின் முதல் கோலை போட்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அந்த அணியின் மற்றொரு வீரர் மார்டின் ஒஜேடோ, 24வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் போட்டு அணியை வலுப்படுத்தினார். இருப்பினும் இரண்டாம் பாதியில் இன்டர் மயாமி அணி வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் போடுவதில் தீவிரம் காட்டினர். 49வது நிமிடத்தில் மயாமி அணியின் மேட்டியோ சில்வெட்டி சிறப்பாக ஆடி முதல் கோல் போட்டார்.

அவரைத் தொடர்ந்து கேப்டன் மெஸ்ஸி 57வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டு 2-2 என்ற கணக்கில் சமநிலைப் படுத்தினார். அத்துடன் நில்லாமல், 85வது நிமிடத்தில் மயாமி அணியின் டெலாஸ்கோ செகோவியா அட்டகாசமாக மேலும் ஒரு கோல் போட, 3-2 என்ற கணக்கில் மயாமி முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட ஓர்லேண்டோ அணியின் காலின் குஸ்கே 88வது நிமிடத்தில் மைதானத்தில் இருந்து நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். போட்டியின் கடைசி நிமிடத்தில் அசகாய ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஸ்ஸி மேலும் ஒரு கோல் போட்டு ரசிகர்களின் கரவொலி பெற்றார். அதையடுத்து 4-2 என்ற கோல் கணக்கில் இன்டர் மயாமி அணி அபார வெற்றி பெற்றது.

Tags : Major League Soccer ,Orlando ,Lionel Messi ,Inter Miami ,Orlando City ,Major League Soccer Championship ,MLS ,Orlando, USA… ,
× RELATED வெஸ்ட் இண்டீசை விரட்டி அரையிறுதிக்கு...