×

தர்மபுரி சிப்காட்டில் நில மதிப்பீடு தொகையை குறைக்க நடவடிக்கை

தர்மபுரி, மார்ச் 2: தர்மபுரி சிப்காட் தொழிற்பூங்காவில் உள்கட்டமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வரும், நில மதிப்பீடு தொகையை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறு,குறு முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மற்றும் நல்லம்பள்ளி வட்டத்தில் 1,733 ஏக்கரில் சிப்காட் தொழிற்பூங்காவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி திறந்து வைத்தார். இதில் உட்புற சாலைகள், மழைநீர் வடிகால், தெருவிளக்கு, குடிநீர் விநியோகம் போன்ற உட்கட்டமைப்பு மற்றும் இதர பணிகள் மேற்கொள்ள மொத்தம் ரூ.937.36 கோடி நிதி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 200 ஏக்கர் பரப்பில் மழைநீர் வடிகால், சிறுபாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் பணிகள் ரூ.66.70 கோடியில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் வரும் ஜூன் மாதத்தில் முடிக்கப்படும். இதுவரை, சிப்காட் தொழிற்பூங்காவில் 9 தொழில் நிறுவனங்களுக்கு 40 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறு, குறு முதலீட்டாளர்கள் கூறுகையில், `சிப்காட்டில், 9 நிறுவனங்களுக்கு 40 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு முதலீட்டாளர்கள் சிப்காட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் நிலத்தின் மதிப்பீடு அதிகமாக உள்ளது. இதனால் சிறு, குறு விவசாயிகள் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டி உள்ளது. மேலும், நிலங்கள் அனைத்து குண்டும், குழியுமாகவும், பெரிய பள்ளமாகவும் உள்ளது. இந்த நிலத்தை சமன்படுத்தவே பெரிய தொகை செலவு செய்ய வேண்டி உள்ளது.

எனவே, அரசு நிலத்தின் மதிப்பீட்டை சற்று குறைக்க வேண்டும். மேலும், நிலத்தை அரசே சமன்படுத்தி தரவேண்டும்,’ என்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், `சிப்காட் உட்கட்டமைப்பு பணிகள் வெகு விரைவில் முடிந்து விடும். தற்போது 9 கம்பெனிகள் வந்து உள்ள நிலையில், மேலும் 250க்கும் மேற்பட்ட கம்பெனிகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த கம்பெனிகள் வந்தால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும்,’ என்றனர்.

Tags : Dharmapuri Shipkot ,Dharmapuri ,Dharmapuri Shipkat Industrial Unit ,Nallampilli Circle ,
× RELATED தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு...