×

டெய்லி பிரியாணி விருந்து, கிப்ட்; சொந்த தொகுதிக்கு எஸ்.பி. ‘ஸ்பெஷல் ட்ரீட்’; முதல்ல என்னைய காப்பாத்திக்குறேன்… அப்புறம் 21-யும் நான் பாத்துக்குறேன்…

கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றாலும், அதன் பின்னர் நடந்த உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என வெளியான உளவுத்துறை தகவலால் அதிமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர். கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளின் பொறுப்பாளராக உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தோல்வி பயம் காரணமாக தொண்டாமுத்தூர் தொகுதிக்குள்ளேயே முடங்கி உள்ளார்.

திமுகவின் கூட்டணி பலம், மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தேர்தல் வியூகம் உள்ளிட்டவை எஸ்.பி. வேலுமணிக்கு அச்சத்தை தந்துள்ளதாம். அதனால் மற்ற தொகுதிகளை பற்றி கவலைப்படாமல், தனது தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்து விடக்கூடாது என அதிகமாக மெனக்கெட்டு வருகிறாராம்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி ஆகிய முப்பெருந்தலைவர்களின் பிறந்த நாள் விழா, பரிசு என பல கோடி ரூபாயை செலவழித்து தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களின் வீடுகளுக்கும் அதிமுக சார்பில் குடை, வாட்டர் பாட்டில், ஹாட் பாக்ஸ், சேலை, சட்டை துணி, வேட்டி, சில்வர் தட்டு உள்ளிட்டவற்றை அள்ளி வழங்கி வருகிறார்.

இதுமட்டுமின்றி தினமும் கட்சி நிகழ்ச்சிகள் என்ற பெயரில் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி பிரியாணி விருந்து வைத்து வருகிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதி என்ற வகையில் ஒரு நாளைக்கு 1,500 பேர் வீதம் வரவழைத்து சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி என விருந்து வைத்து வருகிறார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இன்னும் பல பரிசுப்பொருட்கள் மற்றும் பணத்தை வாக்காளர்களுக்கு அள்ளி வழங்கவும் எஸ்.பி. வேலுமணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல சூலூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி சார்பில் சில்வர் தட்டு மற்றும் ஹாட் பாக்ஸ் ஆகியவற்றை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மற்ற தொகுதிகளுக்கு எந்த பரிசுப்பொருட்களும் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. தொண்டாமுத்தூர் தொகுதிக்கு மட்டும் தனிக்கவனம் கொடுத்து பரிசுகளை அள்ளி வழங்கி வரும் எஸ்.பி.வேலுமணி, 21 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக இருந்து கொண்டு மற்ற தொகுதிகளை கண்டு கொள்ளாமல் இருப்பதால் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Tags : Biryani ,S. B. ,Goa district ,
× RELATED மாப்பிள்ளை ராயப்பேட்டை… ஆனா சட்டை...