ஊட்டி, பிப்.19: ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் விளைந்த உருளைக்கிழங்குகளை அறுவடை செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலைக்காய்கறி விவசாயம் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அதிகளவு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டது.
தற்போது நல்ல விளைச்சலை தந்த நிலையில், அறுவடை பணிகள் துவக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் அதிகாலை நேரங்களில் குளிரையும் பொருட்படுத்தாமல் உருளைக்கிழங்கு பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளை கிழங்கிற்கு கணிசமான அளவு விலை கிடைத்து வருகிறது. தற்போது மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் உருளைக்கிழங்கு அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
