குன்னூர், பிப். 18: நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் குன்னூரில் செயல்பட்டு வரும் வாணிப கழக அலுவலகத்தின் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த 1ம் தேதி முதல் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஏஐடியூசி, சிஐடியு ஆகிய தொழிற்சங்கங்கள் சார்ந்த தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டங்களுக்கு ஆதரவாக மற்ற தொழிற்சங்கத்தினரும் ஆதரவளித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். இன்று (18ம் தேதி) தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைத்துள்ளனர்.
நேற்று குன்னூர் வண்டிச்சோலை பகுதியில் செயல்பட்டு வரும் வாணிப கழக அலுவலத்தின் நுழைவாயிலில் சிஐடியு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க தலைவர் ஹால்தொரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விற்பனையாளர் சங்க மாநில பொருளாளர் ராமகிருஷ்ணன், சிஐடியு செயலாளர் மகேஷ்வரன், ஏஐடியுசி விஜயராஜ் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
