×

பாலக்காடு மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோயில்களில் பூஜைகள்

பாலக்காடு, பிப். 16: பாலக்காடு மாவட்டத்தில் மகாசிவராத்திரியையொட்டி அனைத்து சிவன் கோயில்களிலும் விஷேச பூஜைகள் நடைபெற்றது. கோயில்களில் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி நேற்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விஷேச பூஜைகள் ஆரம்பித்தன. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. பின்னர் ருத்ரஜெப விஷேச பூஜைகள் நடைபெற்றன. நோன்பு இருந்த மகளிர் கோயிலில் நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.

பாலக்காடு அகத்தேத்தரை அருகே அமைந்துள்ள கல்லேக்குளங்கரை சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி உற்சவர் யானை மீது செண்டை வாத்தியம் முழங்க சென்று கல்பாத்தி ஆற்றில் நீராடினார். அவர் வரும் வழிகளில் பக்தர்கள் வீட்டின் முன்பாக குத்துவிளக்கேற்றி நெல் பரைகள் காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் பூஜைகள் செய்தபடி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் மூன்று முறை உற்சவ மூர்த்தி யானை மீது யானையோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசமடைந்தனர்.

பட்டாம்பி தளிமகாதேவர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி கோயில் வளாகத்தில் பக்தர்கள் லட்சத்தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். கோயிலில் நேற்று காலை முதற்கொண்டு சிறப்பு பிராயணம், மூலவருக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் கோயில் வளாகத்தில் வரிசையாக நின்று லட்ச தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்தி சுவாமியை தரிசனம் செய்தனர். பாலக்காடு மாவட்டம் சித்தூர் தெற்கேக்கிராமம், தேனாரி, யாக்கரை, காவில்பாட், கேணம்புள்ளி, பாலத்துள்ளி, பொல்புள்ளி மற்றும் கொடும்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள சிவன் கோயில்களிலும் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. அனைத்து கோயில்களிலும் திரளாக பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

Tags : Shiva ,Maha Shivaratri ,Palakkad district ,Palakkad ,Shiva temples ,Maha Shivaratri festival ,
× RELATED கோத்தகிரி அரசு மருத்துவமனையில்...