சென்னை: 2026-27ம் கல்வியாண்டுக்கான முதல்கட்ட முதன்மை தேர்வு (என்டிஏ) நாடு முழுவதும் 658 மையங்களில் கடந்த ஜனவரி 21 முதல் 28ம் வரை நடந்தது. இந்த தேர்வை 13 லட்சத்து 4,653 பேர் எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து மாணவர்கள் https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தேர்வின் முதல் தாளில் 12 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டெல்லியில் இருந்து ஒருவர், ஆந்திர பிரதேசத்தில் இருந்து 2 பேர், ராஜஸ்தானில் இருந்து 3 பேர், பீகார், ஒடிசா, அரியானா, மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக மாணவன் அஜய் 99.99% மதிப்பெண் பெற்று தேசியளவில் 15வது இடம் பிடித்தார். புதுச்சேரி மாணவன் கார்த்திகேயன் 99.96 சதவீதம் மதிப்பெண் 25வது இடமும் பெற்றார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தகவல் தெரிவித்துள்ளது. அடுத்தகட்டமாக ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வு ஏப்ரல் 1 முதல் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் இணையவழியில் பிப்ரவரி 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
