×

பிப்ரவரி 25 முதல் மார்ச் 25 வரை தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக் போட்டிகள் அறிமுகம்: கூட்டமைப்பினர் தகவல்

சென்னை: தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் பிப்ரவரி 25 முதல் மார்ச் 25 வரை சென்னையில் நடக்கிறது என தமிழ்நாடு கோல்ப் கூட்டமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக் அறிமுக நிகழ்ச்சி சென்னை, நந்தனத்தில் உள்ள காஸ்மோபாலிட்டன் கோல்ப் கிளப்பில் நேற்று நடந்தது. தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு கோல்ப் கூட்டமைப்பினர் கூறியதாவது:

தமிழ்நாடு கோல்ப் கூட்டமைப்பு (டி.என்.ஜி.எப்) சார்பில் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி அறிமுகப்படுத்தப்படுகிறது. முதலாவது டேப்லெட்ஸ் இந்தியா – தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக் (டி.பி.எல்) சாம்பியன்ஷிப் போட்டி பிப்ரவரி 25 முதல் மார்ச் 25ம் தேதி வரை 5 வார காலத்துக்கு சென்னை நந்தனத்தில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப் கோல்ப் மைதானத்தில் நடக்கிறது.

தன்மையான உறுப்பினர்களுக்காக மட்டுமே நிறுவப்பட்ட தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக் இந்த விளையாட்டை மேம்படுத்துவதற்கும், கோல்ப் சமூகத்திற்குள் நட்புறவை வலுப்படுத்துவதற்கும் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும். அம்ருத் வாரியர்ஸ் கோல்ப், ஓபி எக்ஸ்பிரஸ், மெட்ராஸ் ஈகிள்ஸ், பென்டகன் கோல்ப் அடிக்ட்ஸ், சென்னை ஹஸ்ட்லெர்ஸ், பேர்வே அசாசின்ஸ், மெட்ராஸ் மாஸ்டர்ஸ், டீம் ஆல்செக், 19- வது ஹோல் ஸ்மாஷர்ஸ், ஆர்.எஸ்.எல் , கிண்டி கூண்டாஸ் மற்றும் எக்சிகியூட்டிவ் ஈகிள்ஸ் ஆகிய 12 அணிகள் இந்த போட்டி தொடரில் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்கள் இடம்பெறுவார்கள். 2 பேர் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். 14 வீரர்கள் ஏலம் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனைத்து வீரர்களும் போட்டியின் போது குறைந்தது ஒரு தகுதிச் சுற்றில் பங்கேற்க வேண்டும். முதல் சுற்று 25ம் தேதியும், 2வது சுற்று மார்ச் 4ம் தேதியும், 3வது சுற்று மார்ச் 11ம் தேதியும், 4வது சுற்று மார்ச் 18ம் தேதியும், இறுதி சுற்று மார்ச் 25ம் தேதியும் நடக்கிறது.

4 சுற்றுகள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன் பட்டத்துக்கான சுற்றுக்கு முன்னேறும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இந்த நிகழ்ச்சியில் டி.பி.எல். மற்றும் தமிழ்நாடு கோல்ப் பெடரேசன் தலைவர் கே.சி. ரகுநாதன், போட்டி இயக்குநர்கள் ராமசுப்பிரமணியன், ஏ. சந்திரசேகரன் கே. சுந்தர், பாபு தண்டபாணி மற்றும் அணி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu Golf Premier League ,Chennai ,Tamil Nadu Golf Federation ,
× RELATED ஒன்றிய அரசின் வரி விகித மாற்றங்களால்...