×

திமுக கூட்டணி குறித்து பேசினால் நடவடிக்கை: காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் எவர் பேசினாலும் அவர்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்ற முறையில் இல்லாமல் சகோதரர்களாகவும், இரு குடும்பத்தினர் உறவினர்கள் போல பழகி வந்தனர்.

இந்தநிலையில், திடீரென ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் பேட்டி கொடுத்தார். இதனால் தொண்டர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தநிலையில், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நேற்று மாலை முகப்பேரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார், தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் சட்டமன்ற, நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் தங்களது கருத்துகளைத் தனிப்பட்ட முறையில் இக்கூட்டணி குறித்து தெரிவித்திருக்கிறார்கள்.

அதனையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இக்கூட்டணி குறித்து பொதுவெளியிலோ, ஊடங்கங்களின் வாயிலாகவோ எவரும் எவ்விதக் கருத்தும் கூறக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியில் சிலர் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகிற வகையில் கருத்து கூறுவதை தவிர்த்திருக்க வேண்டும்.

ஆனால், கட்சி கட்டுப்பாடுகளை மீறி கருத்துகள் கூறப்படுவதால், கூட்டணி கட்சிகளிடையே இணக்கமற்ற சூழல் ஏற்பட்டு காங்கிரஸ் கட்சியின் நலன் பாதிக்கப்படும் என்று இக்கூட்டம் கருதுகிறது. எனவே, அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி, திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் எவர் பேசினாலும் அவர்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : DMK ,Congress ,Chennai ,Congress party ,
× RELATED ஒன்றிய அரசின் வரி விகித மாற்றங்களால்...