சென்னை: காங்கிரஸ் மற்றும் திமுக இடையேயான கூட்டணி ஏற்கனவே இருப்பது தான். நாடாளுமன்ற தேர்தலைப் போலவே சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடனே இருக்கிறோம் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஒன்றிய அரசு செய்த மாற்றத்தை கண்டித்து சென்னை முகப்பேர் மேற்கிலிருந்து முகப்பேர் கிழக்கு பேருந்து நிலையம் வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நேற்று நடந்தது.
இந்த பாதயாத்திரையை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த சில நாட்களாகவே பூத், மண்டல், மாவட்ட, மாநிலம் என காங்கிரஸ் பல்வேறு கட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசின் நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து காங்கிரஸ் பெருமளவில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் திமுக இடையேயான கூட்டணி ஏற்கனவே இருப்பது தான், நாடாளுமன்ற தேர்தலைப் போலவே சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடனே இருக்கிறோம். தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவை தேசிய தலைமை தான் அறிவிக்கும். திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது.
யார், யார் என்னென்ன கருத்துகளை கூறினார்களோ? அது அவர்களது சொந்த கருத்து தான். அது கட்சியின் கருத்து அல்ல என்றார். மேலும், தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு, உங்கள் யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. இவ்வாறு கே.சி.வேணுகோபால் கூறினார்.
