×

தகுதிச்சான்றிதழ் கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தியதை கண்டித்து தமிழகத்தில் 25ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: செயற்குழு கூட்டத்தில் முடிவு

நாமக்கல்: தகுதிச்சான்றிதழ் கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தியதை கண்டித்து, தமிழகத்தில் 25ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென நாமக்கல்லில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் அருகே வள்ளிபுரத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டம் நேற்று மாநில தலைவர் தனராஜ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்தனர். கூட்டத்திற்கு பின்பு மாநில தலைவர் தனராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரையிலான அனைத்து வாகனங்களுக்கும் தகுதிச்சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி கடந்த நவம்பரில் உத்தரவிட்டது. இந்த கட்டண உயர்வு லாரி உரிமையாளர்களை மிகவும் பாதிக்கிறது.

இதனால், தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, லாரிகள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளோம். வரும் 25ம் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 6.50 லட்சம் லாரிகள் இயக்கப்படாது.

ஏற்கனவே கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. சுமார் 20,000 லாரிகள் டெல்டா மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் ஏற்றிச்செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தகுதிச்சான்றிதழ் கட்டண உயர்வை ஒன்றிய அரசு அறிவித்தாலும், மாநில அரசு அதனை நிறுத்தி வைக்கலாம்.

ஒரு லாரியை நம்பி 10 குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது. சுமார் ஒரு கோடி வாக்குகள் லாரி உரிமையாளர்கள் மற்றும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களிடம் இருக்கிறது.எனவே, எங்களின் கோரிக்கையை ஏற்கும் வரை லாரிகள் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெறும். இந்த முறை ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகளையும் நிறுத்த உள்ளோம். இவ்வாறு தனராஜ் தெரிவித்தார்.

 

Tags : Tamil Nadu ,Union government ,Namakkal ,State Truck Owners Association ,
× RELATED ஒன்றிய அரசின் வரி விகித மாற்றங்களால்...