சென்னை: மதுரை, தர்மபுரி, கடலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ரூ.21.02 கோடி செலவில் நான்கு “தோழி” விடுதிக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை, தருமபுரி, கடலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் 21 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில், 200 மகளிர் தங்கும் வகையில், புதிதாக கட்டப்பட்டுள்ள 4 பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
இந்த விடுதிகளில் பயோமெட்ரிக் உள் நுழைவு, 24*7 பாதுகாப்பு வசதி, இணைய வசதி, சிசிடிவி வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆரோக்கியமான உணவு, பகல் நேர குழந்தைகள் பராமரிப்பு வசதி, சுடுநீர் வசதி, சலவை இயந்திரம், இஸ்திரி வசதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் பொழுதுபோக்கு அறை போன்ற வசதிகள், குறைந்த வாடகையில் வழங்கப்படுகின்றன.
மகளிரின் பாதுகாப்பான, வசதியான தங்குமிடங்கள் தேவைகளை கருத்தில் கொண்டு, பணிபுரியும் பெண்கள் மட்டுமல்லாது பயிற்சி, உயர்கல்வி, நேர்காணல் போன்ற தேவைகளுக்காக நகரங்களுக்கு இடம் பெயரும் அனைத்து மகளிரின் தேவைகளையும் கருத்தில் கொண்டு குறுகிய கால தங்கும் வசதியையும் பயன்படுத்திகொள்ளும் வகையில் இவ்விடுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷரண்யா, மற்றும் முதன்மை செயல் அலுவலர் பவன் கைபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
