×

தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்தார்

சென்னை: தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ் நேற்று எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். கோவை மாவட்டம் ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின். இவரது மனைவி லீமா ரோஸ் மார்ட்டின். இவர் ஐ.ஜே.கே எனப்படும் இந்திய ஜனநாயக கட்சியில், இணை பொதுச்செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாகவே கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்து வரும் லீமா ரோஸ் மார்ட்டின் கட்சியை விட்டு வெளியேறி மாற்றுக் கட்சியில் இணையக்கூடும் என பேச்சுகள் எழுந்து வந்தன.

அதேபோல், சில வாரங்களுக்கு முன்னர், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை லீமாரோஸ் மார்ட்டின் சந்தித்துப் பேசினார். அது தொடர்பான புகைப்படங்கள் வெளியான போது, அவர் அதிமுகவில் இணைந்து விட்டார் என தகவல்கள் பரவின. ஆனால், ‘அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு’ எனக்கூறி அவ்விவகாரத்துக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார் லீமாரோஸ் மார்ட்டின். இந்நிலையில், கட்சி தலைமை மீது அதிருப்தி அதிகரித்ததால், ஐ.ஜே.கே. கட்சியில் இருந்து விலகுவதாக லீமாரோஸ் மார்ட்டின் கடந்த 10ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2012ம் ஆண்டு துவங்கி இன்று வரை ஏறக்குறைய 14 ஆண்டு காலமாக இந்திய ஜனநாயக கட்சியில் பெரும் அர்ப்பணிப்போடு பயணித்து வந்திருக்கிறேன். 2012ல் துணை பொதுச்செயலாளர் ஆகவும், 2019ம் ஆண்டு முதல் இணை பொதுச்செயலாளராக இருந்து வருகிறேன். கட்சியின் வளர்ச்சிக்காக, எளிய மக்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் வலிமையாக குரல் கொடுத்துள்ளேன். சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளேன்.

தமிழ்நாட்டில் நான் செல்லாத கிராமமே இல்லாத அளவில் அனைத்து இடங்களுக்கும் பயணித்திருக்கிறேன். இது மட்டுமல்லாமல் தேர்தல் காலங்களின் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஐ.ஜே.கே வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டு இருக்கிறேன். நேரம் காலம் பார்க்காமல் நான் உழைத்த கட்சி என் உழைப்பை அங்கீகரிக்கவில்லை என்பதும், சமீப காலமாக எனது உழைப்பை உதாசீனப்படுத்தியதும் எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோன்று பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும், பொது வாழ்வில் துணிச்சலோடும் தைரியத்துடனும் செயல்பட வேண்டும் என்று நான் செல்லும் இடம் எங்கிலும் சந்திக்கும் பெண்களை ஊக்கப்படுத்தி வந்திருக்கிறேன்.

இதுபோன்ற சூழலில் இக்கட்சி ஒரு பெண்ணின் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரத்தை வழங்காதது பெரும் ஏமாற்றமே. சமீப கால கசப்பான அனுபவங்களின் அடிப்படையிலும் இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுக்கிறேன்” என்றார். இதை தொடர்ந்து லீமாரோஸ் நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அதிமுகவில் நேற்று இணைந்துள்ள லீமாரோஸ், தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று மதுரையை சேர்ந்த மன்னன், தனது ஆதரவாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தார்.

Tags : Lema Rose ,Dweka ,Secretary General ,Aadav Arjuna ,Chennai ,Secretary General for Election Management ,Adav Arjuna ,Atamuang ,Edappadi ,KOWAI ,DISTRICT ,G. N. Martin ,Mills ,Lema Rose Martin ,
× RELATED மார்ச் 15 (அ) 16ல் தேர்தல் தேதி அறிவிப்பு?