×

எடப்பாடியா? தங்கமணியா? விளம்பர அக்கப்போர்

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், குமாரபாளையம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம் என்று 6 தொகுதிகள் உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக-பாஜ கட்சிகள் சார்பில் இந்த தொகுதிகளில் போட்டியிட நிர்வாகிகள் பல்வேறு வழிகளில் காய்நகர்த்தி வருகின்றனர். இதில் பாஜ மாநில துணைத்தலைவர்களாக இருக்கும் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி ஆகியோர் திருச்செங்கோடு, ராசிபுரம் தொகுதிகளில் போட்டியிட மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்காக அவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்ந்து தூண்டில் போட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க நாமக்கல் தொகுதி யாருக்கு? என்பதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர் தங்கமணிக்கும் எழுந்துள்ள கருத்துவேறுபாடு, அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நாமக்கல் நகர அதிமுக செயலாளர் பாஸ்கர் ஏற்கனவே நாமக்கல் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். கடந்த தேர்தலிலும் அவருக்கு இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் வெற்றி கை நழுவிப்போனது. இதனால் இந்த முறையும் தனக்கே ஒதுக்க வேண்டும் என்று பாஸ்கர், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். அதேநேரத்தில் மாநகர செயலாளர் பாஸ்கருக்கும், மாவட்ட செயலாளரான மாஜி அமைச்சர் தங்கமணிக்கும் இடையே கடும் கோஷ்டி பூசல் நிலவுகிறது. அதனால் இந்த முறை பாஸ்கருக்கு பதில், அதிமுகவில் மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் தொழிலதிபர் ஸ்ரீதேவி மோகனை, களத்தில் இறக்குவதற்கு தங்கமணி முடிவு செய்துள்ளார்.

இதை மைன்டில் வைத்து அவரும், தொகுதி முழுவதும் உற்சாகமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் பாஸ்கரின் ஆதரவாளர்கள், தொகுதியின் பல்வேறு பகுதிகளில் கட்சி சின்னத்தை வரைய ஆரம்பித்துள்ளனர். அதில் எடப்பாடி ஆசி பெற்ற கே.பி.பி.பாஸ்கர் என்று கொட்டை எழுத்தில் எழுதி வைத்துள்ளனர். முறைப்படி தொகுதி ஒதுக்கப்பட்டு, வேட்பாளர் அறிவிக்கப்படும் முன்பே, பாஸ்கரின் ஆதரவாளர்கள் இப்படி எழுதி வைத்திருப்பது புகைச்சலை கிளப்பியுள்ளது.

அதேநேரத்தில் ஸ்ரீதேவி மோகனின் தரப்போ, அவர் தான் வேட்பாளர் என்ற தகவலை அனைத்து மட்டங்களிலும் பரப்பி வருகிறது. இதனால் நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது எடப்பாடி பழனிசாமி ஆதரவு பெற்ற மாஜி எம்எல்ஏவா? அல்லது தங்கமணியின் ஆதரவு பெற்ற தொழிலதிபரா? என்ற போட்டி, தேர்தல் களத்தில் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘‘நாமக்கல் தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், தங்கமணிக்கும் மாறுபட்ட கருத்துகள் உள்ளது. முன்னாள் எம்எல்ஏ பாஸ்கருக்கு வழங்க வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். இதனால் தங்கமணியோ, தனக்கு எதிராக எடப்பாடி காய்நகர்த்துகிறார் என்ற வருத்தத்தில் இருக்கிறார். தங்கமணியை பொறுத்தவரை எடப்பாடியை விட, பாஜகவுடன் அதிக நெருக்கத்தில் இருக்கிறார்.

இது எடப்பாடிக்கு கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்கமணி பரிந்துரைக்கும் நபர்களுக்கு முடிந்தவரை சீட் கொடுக்காமல் ஒதுக்கவேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு உள்ளது. கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, வேட்பாளர் யார்? என்ற அறிவிப்பு வெளியான பிறகே நாமக்கல் தொகுதி எடப்பாடி ஆதரவு பெற்ற பாஸ்கருக்கா? தங்கமணி ஆதரவு பெற்ற ஸ்ரீதேவி மோகனுக்கா? என்பது தெரியவரும்,’’ என்றனர்.

 

Tags : Edapadia ,Namakkal district ,Namakkal ,Kumarapaliyam ,Sendamangalam ,Paramathivelur ,Thiruchengodu ,Rasipuram ,Atamuga-Baja ,National Democratic Alliance ,
× RELATED மகனுக்கு ஆப்பு வைக்க ராமதாஸ் கடைசி அஸ்திரம்