திருவொற்றியூர்: சென்ைன மாநகராட்சி உருவாக்கியுள்ள நவீன மாட்டுக் கொட்டகைகளில் கால்நடைகளை வைக்க, சென்னையில் உள்ள கால்நடைகளுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணி மற்றும் கால்நடைகளை பதிவு செய்து கொள்ளும் பணியை சென்னை மாநகராட்சி நேற்று தொடங்கியது. சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவது மற்றும் சாலைகளில் படுத்துக்கிடப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக காணப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. அதனால் கால்நடைகளை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளை வெளியில் விடுவது தடுக்கப்பட வேண்டும் என்ற வகையில் அதன் உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை சென்னை மாநகராட்சியில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி கால்நடைகளுக்கு மைக்ரோசிப் பொருத்தவும் திட்டமிட்டு இருந்தது. இதை தொடர்ந்து, கால்நடைகளை பதிவு செய்வது, மைக்ரோசிப் பொருத்தும் பணிகளை மாநகராட்சி நேற்று தொடங்கியுள்ளது. இதையடுத்து சென்னை அண்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ள நவீன மாட்டு கொட்டகைகளில் 160 மாடுகளை பதிவு செய்யும் செயல் முறை தொடங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி கால்நடை அதிகாரி கமல் உசேன் தெரிவித்துள்ளார். இந்த செயல்முறை முடிந்த பிறகு, கால்நடைகளின் உரிமையாளர்கள் ரூ.100 செலுத்தினால் அவற்றுக்கு மைக்ரோ சிப் செய்யப்படும்.
பின்னர் மாநகராட்சியின் உரிமங்களை மாநகராட்சி வழங்கும். மைக்ரோசிப்கள் கால்நடைகளின் காதின் அடிப்பகுதியில் பொருத்தப்படும். மேலும், கால்நடை மற்றும் அதன் உரிமையாளரின் விவரங்கள், அவற்றின் ஆதார் எண்ணுடன் இணைத்து பதிவு செய்யப்படும். இந்த மைக்ரோசிப் பொருத்தும் பணிக்காக மாநகராட்சி எந்த கட்டணமும் வசூலிக்காது. மைக்ரோசிப் பொருத்தப்பட்ட பசு மற்றும் எருமைகள் சாலையில் வழி தவறி கிடப்பது கண்டறியப்பட்டால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதன் காதில் பொருத்தப்பட்டுள்ள சிப்களை ஸ்கேன் செய்வார்கள். அதன் மூலம் பெறப்படும் விவரங்களை கொண்டு அதன் உரிமையாளரை கண்டுபிடித்து விவரங்களை பதிவு செய்வார்கள்.
திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களில் உள்ள நவீன மாட்டு கொட்டகைகளில் கால்நடைகளின் மைக்ரோசிப் மற்றும் பதிவு செய்யும் பணிகள் அடுத்த வாரம் நிறைவடையும். பணிகள் முடிந்ததும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணிகளை தொடங்குவோம். பணிகள் மார்ச் 18ம் தேதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அதிகாரி தெரிவித்துள்ளார். ராயபுரத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் கட்டியுள்ள மிகப்பெரிய மாட்டுக் கொட்டகையில் 550 பசுக்கள் மற்றும் எருமைகள் தற்போது உள்ளன. இந்த நவீன மாட்டுக் கொட்டகையில் கால்நடைகளை தங்க வைக்க அதன் உரிமையாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.10 செலுத்த வேண்டும். தண்டையார்பேட்டை, பெருங்குடி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மண்டலங்களில் நவீன மாட்டுக் கொட்டகைகள் கட்டும் பணிகள் பிப்ரவரி மாத இறுதிக்குள் முடிவடையும். மார்ச் மாத இறுதிக்குள் சென்னை நகரம் முழுவதும் 17 நவீன மாட்டுக் கொட்டகைகளை நிர்வாகம் திறக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாள் ஒன்றுக்கு ரூ.10
ராயபுரத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் கட்டியுள்ள மிகப்பெரிய மாட்டுக் கொட்டகையில் 550 பசுக்கள் மற்றும் எருமைகள் தற்போது உள்ளன. இந்த நவீன மாட்டுக் கொட்டகையில் கால்நடைகளை தங்க வைக்க அதன் உரிமையாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.10 செலுத்த வேண்டும்.
ஆதார் எண்ணுடன்…
மைக்ரோசிப்கள் கால்நடைகளின் காதின் அடிப்பகுதியில் பொருத்தப்படும். கால்நடை மற்றும் அதன் உரிமையாளரின் விவரங்கள், அவற்றின் ஆதார் எண்ணுடன் இணைத்து பதிவு செய்யப்படும். இந்த மைக்ரோசிப் பொருத்தும் பணிக்காக மாநகராட்சி எந்த கட்டணமும் வசூலிக்காது.
