- ஜகாத்
- ரமலான்
- காதர் மொஹிதீன்
- தேர்தல் ஆணையம்
- சென்னை
- முஸ்லிம்கள்
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
- ஜனாதிபதி
- கே.எம். காதர் மொஹிதீன்
- தமிழ்நாடு…
சென்னை: ரமலானின் கடைசி 5 நாட்களில் இஸ்லாமியர்கள் ஜகாத் கொடுக்க எடுத்து செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை தேர்தல் அமைதியாக நடைபெற இ.யூ.முஸ்லிம் லீக் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று உறுதி அளிக்கிறோம். தேர்தல் தேதி அட்டவணை வெளியிட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனைகளை நடத்தி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் சிறு வணிகர்கள், அப்பாவி பொதுமக்கள் பாதிப்பு அடைகிறார்கள் என்று பொதுவாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போது ரமலான் காலம் என்பதால் இஸ்லாமியர்கள் அனைவரும் தங்களுடைய மார்க்கக் கடமையான ஜகாத் மற்றும் பித்ரா ஆகியவற்றை ஏழை மக்களுக்கு கொடுத்து வருகிறார்கள். ரமலானின் கடைசி 5 நாட்களில் இந்த ஜகாத் மற்றும் பித்ரா கொடுப்பதை முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளார்கள். இப்படி, ஜகாத் கொடுப்பதற்காக பணத்தை எடுத்துச் செல்லும்போது, அவற்றை பறிமுதல் செய்வதை தவிர்க்க வேண்டும் என அன்புடன் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இதுதொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தாங்கள் பிறப்பிக்க வேண்டும். இஸ்லாமிய மக்கள் சார்பில் வைக்கப்படும் இந்த கோரிக்கையை தாங்கள் பரிசீலனை செய்து நிச்சயம் நடைமுறைப்படுத்துவீர்கள் என உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
