×

தக்காளி வியாபாரியிடம் ரூ.53 ஆயிரம் பறிமுதல் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அத்துமீறல்: விக்கிரமராஜா கண்டனம்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடந்த 13ம் தேதி மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்னரே, வணிகர்கள் தேர்தல் காலங்களில் சந்திக்கும் பலதரப்பட்ட சிரமங்களையும் எடுத்துக்கூறினோம். அப்போது, வணிகர்கள் எடுத்துச்செல்லும் ரொக்கப் பண பரிவர்த்தனையையும், பொருட்கள் எடுத்துச் செல்வதையும், தளர்த்தி அறிவித்திடக் கோரி கோரிக்கை மனு சமர்ப்பித்திருந்தோம்.

ஆனால், இன்றைய செய்தி ஊடகங்களில், நாங்கள் எடுத்துக் கூறிய கோரிக்கைகளுக்கு எவ்வித தீர்வும் எட்டப்படாமல், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் தக்காளி வியாபாரி எடுத்துச் சென்ற ரூ.53 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் அதிகாரி கவியரசுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிய வருகின்றது. இது கேள்விக்குரியதாகவும் இருக்கின்றது, தக்காளி வியாபாரம் என்பது எந்தவித ஆவணமும் இன்றி, பரிவர்த்தனை செய்யப்படும் வேளாண் விவசாயப் விளை பொருளாகும். அதற்கு எவ்வித ஆவணமும் சமர்ப்பிக்க இயலாது. தற்போதுள்ள தேர்தல் விதிமுறை ரூ.50 ஆயிரம் ரொக்கம் எடுத்துச்செல்ல அனுமதி அளித்திருக்கும் நிலையில், ரூ.53 ஆயிரம் என்பது மாறுபட்ட பெரும் தொகை அல்ல.

சட்டத்தை அதிகாரிகள் தங்களுக்கேற்ப வளைத்துக் கொண்டு, விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் சிரமங்களை சிந்தித்தும் கவனிக்காது, தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக சட்ட விதிகளை தங்களுக்கேற்ப வளைத்துக் கொள்ளும் நிலையை அரசு அதிகாரிகள் மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். மக்களுக்காகத்தான் சட்டமே தவிர, சட்டத்தை அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வளைத்துக் கொள்ள முடியாது. இதேநிலை தொடருமானால் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, வணிகர்களின் நலன் காக்க வீதியில் இறங்கி போராடவும் தயங்காது என்பதை உறுதியாக பதிவு செய்ய விரும்புகிறது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்து சுற்றறிக்கை அளித்து, சட்ட நடைமுறைகளை பொதுமக்களின் நலனுக்காகவும், வணிகர்களின் நலன் காத்திட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Election Flying Squad ,Vikramaraja ,Chennai ,Tamil Nadu Traders Association ,President ,A.M. Vikramaraja ,State Chief Electoral Officer ,Archana Patnaik ,
× RELATED மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்;...