×

தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் ரூ.1.26 கோடி பறிமுதல் தமிழகத்தில் 2,106 பறக்கும் படைகள் அமைப்பு: டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை கண்காணிக்க உத்தரவு; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ.1.26 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும். தமிழகம் முழுவதும் 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6ம் தேதி. வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும். வேட்புமனு திரும்பபெற ஏப்ரல் 9ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கு மே 4ம் தேதி நடைபெறும். தமிழகத்தில் மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,77,38,925 பேரும், பெண் வாக்காளர்கள் 2,89,60,838 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,617 பேரும் அடங்கும். தமிழகம் முழுவதும் மொத்த வாகன சோதனையில் 2,106 பறக்கும் படையினர் களத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் மாலை முதல் செயல்பட தொடங்கி விட்டனர். தங்கள் பெயர், வாக்குச்சாவடி நம்பர் ஆகியவை குறித்து பூத் லெவல் ஆபீசரிடம் தெரிவித்தால் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் ஆணையம் நிறைய அறிவுரை வழங்கியுள்ளது. மொபல் போன் வாக்குச்சாவடி மையம் வரை எடுத்து செல்லலாம். ஆனால் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்துக்கு போன் அனுமதி இல்லை. அங்குள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் போனை வைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும். வாக்குச்சாவடி மையங்களில் தண்ணீர் வசதி என அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். அரசு பொது விடுமுறை தவிர்த்து மற்ற நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரம் வரை எடுத்துச் செல்லலாம். அதற்கு மேல் பணம் கொண்டு செல்ல, உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். சரியான ஆவணங்கள் இருந்தால் உடனடியாக பணம் திருப்பி கொடுத்து விடுவார்கள். எங்கிருந்து பணம் எடுத்துள்ளேன் என்பதற்கான ஆதாரம் கண்டிப்பாக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்க வேண்டாம் என்று பறக்கும் படையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் எடுத்துச்செல்லும் பணம் அவர்களுடையதுதானா என்பதற்கான ஆவணங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

ஆவணங்கள் இருந்தால் தொந்தரவு வராது. எல்லா மாவட்டத்திலும் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏதாவது சந்தேகம் இருந்தால் அந்த குழுவுடன் சம்பந்தப்பட்டவர்கள் ஆலோசனை நடத்தலாம். டிஜிட்டல் பண பரிமாற்றம் குறித்தும் தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும். அதற்காக 23 துறையை சார்ந்த மத்திய, மாநில அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3.14 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்துள்ளனர். புதிய வாக்காளர்களுக்கு தேர்தலுக்கு முன் கண்டிப்பாக அடையாள அட்டை வழங்கப்பட்டு விடும்.

தேர்தல் பணியில் 3.06 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுவார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் தற்போது நேற்று காலை 11 மணி வரை ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக தமிழகத்தில் சுமார் ரூ.1.26 கோடி வரை பறக்கும் படையினர் பிடித்துள்ளனர். தமிழகத்தில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் இறுதி நாளுக்கு அதாவது 10 நாட்களுக்கு முன்பு (மார்ச் 27ம் தேதி) வரை விண்ணப்பம் செய்யலாம்.

அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். அரசியல் கட்சிகள் பிரசாரத்துக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே அனுமதி கேட்க வேண்டும். 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வருவதாக இருந்தால் அங்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசியல் கட்சியினரே ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பயிற்சி வழங்கப்படும். இதுவரை 50 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர். வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும், அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* ஆன்லைன் மூலமும் வேட்புமனு செய்யலாம்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறும்போது, ‘‘தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் ஆன்லைன் மூலமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஆனால், அரசியல் கட்சிகள் நேரில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வதையே விரும்புகிறார்கள். ஏஐ தொழில்நுட்பம் மூலம் சமூகவலைதளங்களில் போலியான வீடியோக்கள் வருவதை ஏஐ தொழில்நுட்பம் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு விட்டது. மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டாலும், சனி, ஞாயிறு (4 மற்றும் 5ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. அதன்படி 6 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்றார்.

* ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வாய்ப்பில்லை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் நிருபர்கள் தொடர்ந்து பேசும்போது, ‘‘தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தற்போது ஒரு பவுன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் ரூ.1.50 லட்சம் வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.50 ஆயிரத்திலேதான் நிற்கிறது. வியாபாரிகளும் இந்த தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகள் பில் இல்லாமல் அதிக பணம் எடுத்துச்செல்லும் பழக்கம் தற்போதும் தொடர்கிறது. அதனால் தேர்தல் ஆணையம் இதுபற்றி பரிசீலிக்குமா?\\” என்று கேள்வி எழுப்பினர். ஆனாலும் தேர்தல் அதிகாரி அதற்கு, ‘இந்திய தேர்தல் ஆணையம் ரூ.50 ஆயிரம் மட்டுமே அனுமதி அளித்துள்ளது. அதற்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதற்கான ஆவணம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்’ என்ற பதிலையே திரும்ப திரும்ப கூறினார்.

Tags : Tamil Nadu ,Chief Electoral Officer ,Chennai ,Tamil Nadu.… ,
× RELATED மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்;...