சென்னை: துபாயிலிருந்து நேற்று அதிகாலை 2.15 மணியளவில் 242 பயணிகளுடன் சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. தொடர்ந்து, அதிகாலை 4 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் 206 பயணிகளுடன் துபாய் புறப்பட்டு சென்றது. குஜராத் கடல் எல்லையில் சுமார் 38 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, துபாய் விமான நிலையம் அருகே மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடப்பதாகவும், இதனால் வான்வழி தற்காலிகமாக மூடப்படுவதாகவும் விமானிக்கு அவசர தகவல் கிடைத்தது.
இதையடுத்து, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானி, துபாய் மற்றும் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைகளோடு அவசரமாக தொடர்பு கொண்டார். அப்போது விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு சென்று தரை இறக்கும்படியும், மறு உத்தரவு வரும் வரையில் சென்னையில் இருந்து புறப்பட்டு வர வேண்டாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 8.20 மணியளவில் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் சென்னை நகரில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இதனிடையே, துபாயிலிருந்து நேற்று காலை 8.15 மணியளவில் சென்னைக்கு வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் சென்னையில் இருந்து நேற்று காலை 9.50 மணியளவில் துபாய்க்கு புறப்பட தயாரானது. அதில் 258 பயணிகள் இருந்தனர். ஆனால் துபாயில் வான் எல்லை மூடப்பட்டதால் விமானம் துபாய் செல்ல முடியாமல் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நேற்று காலை 10.30 மணியளவில் சென்னையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய விமானமும் தாமதமாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, துபாய் செல்ல வேண்டிய மூன்று விமானங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.
