×

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக செந்தில்பாலாஜி டெல்லி பயணம்

சென்னை: கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த, தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தவெக தலைவர் நடிகர் விஜய் மற்றும் கட்சியின் நிர்வாகிகளிடம் டெல்லி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

நடிகர் விஜய்யை சிபிஐ இதுவரை மூன்று முறை சம்மன் அனுப்பி, டெல்லிக்கு அழைத்து விசாரணை நடத்தியது. இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக, தமிழக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜிக்கு, இன்று (17ம்தேதி) சிபிஐ விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது. இதையடுத்து, சிபிஐ விசாரணைக்கு ஆஜராக செந்தில்பாலாஜி நேற்று இரவு 9.30 மணியளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிவிட்டு இன்று இரவு விமானத்தில் சென்னை அல்லது கோவை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

Tags : Senthil Balaji ,Delhi ,CBI ,Karur ,Chennai ,Thaveka ,
× RELATED மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்;...