×

வாக்குச்சாவடிகளில் வெப் காஸ்டிங் செய்வதற்கான டெண்டரை எதிர்த்து வழக்கு: இந்திய தேர்தல் ஆணையம் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் 75 ஆயிரம் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குச்சாவடிகளை கண்காணிக்கவும், வாக்கு எண்ணிக்கை மையங்களை கண்காணிப்பதற்காகவும், வெப் காஸ்டிங் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் டெண்டர் கோரியது. இந்த டெண்டரில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் விதித்திருந்தது. இந்த நிபந்தனைகளை எதிர்த்து சென்னையை சேர்ந்த நெட் செக்யூர் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆஜராகி, தமிழகம் உள்ளிட்ட 9 மாநில தேர்தல்களில் தங்கள் நிறுவனம் வெப் கேமராக்களை பொருத்தி, வெப் காஸ்டிங் செய்துள்ளது. தங்கள் நிறுவனம் இந்த டெண்டரில் கலந்துகொள்ள விடாமல் தடுக்க 100 கோடி ரூபாயை வர்த்தகம் செய்திருக்க வேண்டும் என்ற நியாயமற்ற நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கு வெப் காஸ்டிங்குக்காக, ஒரு லட்சத்து 50 ஆயிரம் வெப் கேமராக்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், தங்கள் நிறுவனத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வெப் கேமராக்கள் உள்ளன. வர்த்தகம் 100 கோடி ரூபாய் என்ற நிபந்தனையால் தங்களை போன்ற சிறு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலை இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி, தமிழகத்தில் நடந்தப்பட்ட கடந்த தேர்தலில் 45 ஆயிரம் வெப் கேமராக்களை மட்டுமே பயன்படுத்திய நிலையில், வரும் தேர்தலில் இதை 3 மடங்காக அதிகரித்து 1 லட்சத்து 50 ஆயிரம் கேமராக்களை பயன்படுத்தவுள்ளோம். மனுதாரர் டெண்டரில் கலந்துகொள்ளவில்லை. 17ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு டெண்டர் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் டெண்டர் நிபந்தனைகளை திருத்த அனுமதித்தால் தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று வாதிட்டார். இந்த வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, இது தொடர்பாக நாளைக்குள் (இன்று) பதிலளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.

Tags : Election Commission of India ,Chennai ,Tamil ,Nadu ,Assembly ,Election Commission ,Tamil Nadu ,
× RELATED மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்;...