மதுரை, பிப். 11: நேர்மையாக தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதற்கு, அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று, மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில், மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கு 2026 சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் பொறுப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பிரவீன்குமார் பேசியதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மண்டல அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை உணர்ந்து, தேர்தல் பணிகளை மிகுந்த பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும்.
