போடி, பிப்.14: போடியில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நூறு சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. போடியில் வரும் சட்டமன்ற தேர்தலில், நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி நேற்று, மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி சென்றனர். இந்த பேரணியை போடி தாசில்தார் சந்திரசேகர் தலைமை வகித்து கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணி, ஜீவா நகரில் புறப்பட்டு காமராஜர் சாலை, தேவர் சிலை, பெரியாண்டவர் ஹைரோடு, அண்ணாநகர், தென்றல்நகர் வழியாக நீதிமன்றம் அருகே நிறைவடைந்தது. இதில் வாக்காளர்கள் அனைவரும் தங்களின் வாக்குகளை நூறு சதவிகிதம் சட்டமன்ற தேர்தலில் பதிவு செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
