சென்னை: ரோபோட்டிக் உதவியுடன் கூடிய இதய தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை திட்டத்தை காவேரி மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. நான்காவது தலைமுறை நவீன ‘டா வின்சி’ (da Vinci) ரோபோட்டிக் கருவியைப் பயன்படுத்தி, இதயம் துடித்துக்கொண்டிருக்கும் போதே இந்த ரத்த நாள மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் திட்டத்தை காவேரி மருத்துவமனை தொடங்கி உள்ளது. நோயாளியின் மேம்பட்ட நலனை மையமாகக் கொண்ட மிகத் துல்லியமான, பயனளிக்கும் சிகிச்சையை இது வழங்கும்.
பொதுவாக இதய அறுவை சிகிச்சையின் போது இதயத்தின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, ‘ஹார்ட்-லங்’ (இதய-நுரையீரல்) இயந்திரம் பயன்படுத்தப்படும். ஆனால், இந்த ரோபோட்டிக் முறையில் கரோனரி தமனி நோய் பாதிப்புள்ள தேர்வு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு இதய செயல்பாட்டை நிறுத்தாமலேயே சிக்கலான அறுவை சிகிச்சை செயல்முறைகளை மருத்துவர்கள் மிகத் துல்லியமாக செய்ய இயலும்.
பெரிய அளவில் தழும்பு ஏற்படாதவாறு, சிறிய துளைகள் வழியாகவே மேற்கொள்ளப்படும் இந்த அணுகுமுறை, இதய-நுரையீரல் இயந்திரத்தின் பயன்பாட்டை அவசியமற்றதாக்கி விடுகிறது. இதனால் நோயாளிக்கு அறுவை சிகிச்சையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை தழும்பு 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை குறைவாக இருக்கும். ரத்த இழப்பு மற்றும் ரத்தம் செலுத்த வேண்டிய அவசியம் 50 சதவீதம் வரை குறையும். காயம் தொடர்பான பாதிப்புகள் மற்றும் தொற்று ஏற்படும் அபாயம் மிகக் குறைவாக இருக்கும்.
இதுகுறித்து டாக்டர் அருண்குமார் கிருஷ்ணசாமி கூறியதாவது: ரோபோட்டிக் தொழில்நுட்பம், மிகத் துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் அதே சமயம் மிகச் சிறிய துளைகள் வழியாகவும் இதய பைபாஸ் அறுவை சிகிச்சையைச் செய்ய உதவுகிறது. இந்த திட்டத்தின் மூலம், குறிப்பிட்ட நோயாளிகளுக்கு குறைந்த அளவிலான உடல் அசவுகரியம், விரைவான குணமடைதல் மற்றும் நீண்ட கால அடிப்படையில் சிறந்த மருத்துவப் பலன்களை வழங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
