மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் பொய் புகார் அளித்த நிகிதா நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்ப மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார். இவர் தனிப்படை போலீசாரின் விசாரணையின்போது தாக்குதலில் உயிரிழந்தார்.
இதுகுறித்து கொலை வழக்கு பதிந்து சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 4 தனிப்படை போலீசார் ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, செய்யாத குற்றத்திற்காக ஒருவரை அடித்தே கொலை செய்துள்ளனர். இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
பொய்யான புகார் அளித்ததாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, பொய் புகார் அளித்த நபர் மீது சிபிஐ விசாரணை நடத்தியுள்ளதா என கேட்டிருந்தார்.
அஜித்குமார் கொலை வழக்கில் புகார்தாரரான பேராசிரியை நிகிதாவை அழைத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி மார்ச் 4ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு நிகிதாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
