×

கேரளா செல்லும் விமானத்தை கோட்டை விட்ட பி.எல்.சந்தோஷ்: விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம்: சிஆர்பிஎப் விசாரணை

 

சென்னை: கேரளா செல்லும் விமானத்தைப் பிடிப்பதில் கோட்டை விட்ட பாஜ தேசிய செயலாளர் பிஎல் சந்தோஷ், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிஆர்பிஎப் அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக பாஜவில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் கட்சியில் கடும் குழப்பம் நிலவுகிறது. இந்தக் குழப்பத்தை சரி செய்வதற்கான பணிக்காக பாஜவின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னைக்கு இரு நாட்களுக்கு முன்னர் வந்தார்.

பாஜ மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக பாஜ அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்தை அதிரடியாக மாற்றி உத்தரவிட்டார்.  இந்தநிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை விமானநிலையத்தில் இருந்து கொச்சிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக விமான பயணிகள் பரிசோதனை முடிந்த பிறகு 9.20 மணிக்குத்தான் பி.எல்.சந்தோஷ் வந்தார்.

அவரை இன்டிகோ விமான அதிகாரிகள் மற்றும் சிஐஎஸ்எப் அதிகாரிகள் அவரை விமானத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. பயணிகள் செல்லும் நேரம் முடிந்து விட்டது. இதனால் செல்ல அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர். இதனால் விமானநிலைய அதிகாரிகளிடம் தான், பாஜ தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் என்று கூறியுள்ளார்.

ஆனால் விமான அதிகாரிகள், நேரம் முடிந்து விட்டதால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். பாதுகாப்புக்கு இருந்த சிஐஎஸ்எப் அதிகாரிகளும் அவரை விமானநிலையத்துக்குள் செல்ல அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல், விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்து விட்டார். பின்னர் வேறு விமானத்தில் சரியான நேரத்துக்கு வந்து கொச்சி புறப்பட்டுச் சென்றார். ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் விஐபிக்கள் மட்டுமே விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் விஐபி வரிசையில் சென்று விமானத்தில் ஏறுவார்கள்.

ஆனால், கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். ஆனால் பிஎல் சந்தோஷ், ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் என்பதால், தாமதமாக வந்து விமான அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து விமானத்துறையில் பிஎல் சந்தோஷ் புகார் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிஆர்பிஎப் அதிகாரிகள் விமானநிலையம் வந்து விசாரணை நடத்தினர். இது விமானநிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : P.L. Santosh ,Kerala ,CRPF ,Chennai ,BJP ,national secretary ,Tamil Nadu ,BJP… ,
× RELATED தமிழ்நாட்டில் நடந்து வந்த எஸ்ஐஆர்...