×

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்திய ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி தலைவிக்கு பாஜ மாவட்ட தலைவர் டார்ச்சர்: தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு : ஆடியோ வைரல்

 

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது, மனைவி ராஜேஸ்வரி (46). பாஜ மாவட்ட மகளிர் அணி தலைவி. இவர் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜ மகளிரணி சார்பில் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக பிளக்ஸ் அடித்து பல்வேறு பகுதிகளில் வைத்திருந்தார்.

இந்நிலையில், பாஜ மாவட்ட தலைவர் பாண்டித்துரை, பிளக்ஸ் மற்றும் போஸ்டர்களில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைவரின் போட்டோவை போட வேண்டும். கட்சிக்கு தேவையான பணத்தை செலவு செய்ய வேண்டும் என ராஜேஸ்வரியை டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, நேற்று காலை பாஜ மகளிரணி மாநில தலைவர் கவிதாவை தொடர்பு கொண்டு பேசிய ராஜேஸ்வரி, மாவட்ட தலைவர் கொடுத்த டார்ச்சரை கூறி தற்கொலை செய்ய போவதாக தெரிவித்து உள்ளார். அந்த ஆடியோ நேற்று காலையே வெளியாகி வைரலானது.

அந்த ஆடியோவில் ராஜேஸ்வரி பேசியது: அக்கா வணக்கம், மனம் உடைந்து போய் உள்ளேன். மாவட்ட தலைவர் பாண்டித்துரை தம்பி, ஓவர் டார்ச்சர் கொடுக்கிறார். பொறுப்பை எழுதி கொடுத்துவிட்டு போ. தவறான ஆளை பதவியை போட்டு விட்டேன். எழுதி கொடுத்துவிட்டு போ என டார்ச்சர் கொடுக்கிறார். மாவட்ட பொறுப்பில் இருக்க எனக்கு தகுதி இல்லையா? எனது சொந்த செலவில் அனைத்தையும் பார்த்தேன். அவர் சொன்ன ஒரு விசயத்தை கூட தட்டவில்லை. அனைத்து பணிகளையும் செய்தேன்.

மகளிரணிக்கு எந்த வேலை செய்தாலும் எனக்கு இடைஞ்சல் கொடுக்கிறார். 3 மாதமாக டார்ச்சர். காலையில் போன் செய்து, நான் தலைவரா? உன் புருசன் தலைவரா? உன் புருசன் எப்படி தலையிடலாம்? பிளக்ஸில் மகளிரணி நிர்வாகிகளை மட்டும் போட்டு அடித்தது தப்பு என கூறுகிறார். அனைவரையும் போட வேண்டும் என கூறி பிரச்னை செய்து மனஉளைச்சல் செய்கிறார். தலைமையிடம் பேசுகிறேன். மகளிரணி தலைவியிடம் பேசுகிறேன்.

உன்னை பதவி விலக செய்யாமல் விட மாட்டேன் என இவர் செய்யும் டார்ச்சர் தாங்கவில்லை. மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் செய் என கூறினார். பின்னர் காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்து என கூறினார். எனக்கு ஒன்றரை லட்சம் செலவு. எனது சாவுக்கு பாண்டித்துரை தான் காரணம். மாவட்ட தலைவர் டார்ச்சர், எப்போது பார்த்தாலும் என்னை இன்சல்ட் செய்வது, பணம் கொடுக்கவில்லை என இன்சல்ட் செய்வதை என்னால் முடியவில்லை. இருக்க முடியவில்லை.
இவ்வாறு பேசுகிறார்.

ஆடியோவில் மாநில மகளிரணி தலைவி கவிதா, ‘‘ஆர்ப்பாட்டம் முடியட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம். எந்தவிதமான அவசர முடிவும் எடுக்க வேண்டாம்’’ என கூறுகிறார். ஆனால் நேற்று காலை வீட்டில் இருந்த ராஜேஸ்வரி கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் கதவை உடைத்து ராஜேஸ்வரியை காப்பாற்றி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தனியார் மருத்துவமனை வளாகத்தில் பாஜ நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர் பாண்டித்துரை ஆகியோர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ராஜேஸ்வரி, தீவிர சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரிடம் காரைக்குடி இன்ஸ்பெக்டர் சவுதாமா வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டார்.

வாக்குமூலத்தில் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியதாவது: இன்று (நேற்று) நடக்க இருந்த மகளிரணி ஆர்ப்பாட்டத்திற்கு ஆகும் செலவுகளை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட தலைவர் பாண்டித்துரை கூறினார். என்னால் அவ்வளவு செலவு செய்ய முடியாது என கூறினேன். செலவு செய்ய முடியாது என்றால் கட்சியை விட்டு சென்று விடு. பதவியை விட்டு விலகிக் கொள் என டார்ச்சர் செய்தார். இதனால் எனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தேன்’’ என தெரிவித்தாக கூறினர்.

Tags : BJP ,president ,Karaikudi ,Muthukrishnan ,Ponnagar ,Karaikudi, Sivaganga district ,Rajeshwari ,National Democratic Alliance ,BJP Women's Wing ,
× RELATED தமிழ்நாட்டில் நடந்து வந்த எஸ்ஐஆர்...