×

துபாயில் சிறைவைக்கப்பட்ட சகோதரனை மீட்க பிரதமர் மோடிக்கு கண்ணீர் வேண்டுகோள் விடுத்த நடிகை: தொடரும் சட்டப் போராட்டத்தால் கவலை

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள தனது சகோதரனை மீட்கவும், கணவரின் கொடுமையிலிருந்து தப்பிக்கவும் நடிகை சொலினா ஜெட்லி நடத்தி வரும் சட்டப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் சிறப்புப் படை ராணுவ அதிகாரியான விக்ராந்த் குமார் ஜெட்லி, கடந்த 2024ம் ஆண்டு துபாயில் உள்ள வணிக வளாகத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். சுமார் 17 மாதங்களாக அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் எந்தவிதமான முறையான குற்றச்சாட்டுகளும் இன்றி தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, ஆஸ்திரியாவில் வசித்து வந்த அவரது சகோதரியும் பாலிவுட் நடிகையுமான சொலினா ஜெட்லி, தனது கணவர் பீட்டர் ஹாக் மூலம் கடுமையான குடும்ப வன்முறை மற்றும் பொருளாதார ரீதியான துன்புறுத்தல்களைச் சந்தித்து வந்தார். கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி அண்டை வீட்டாருடைய உதவியுடன் ஆஸ்திரியாவிலிருந்து நடிகை சொலினா ஜெட்லி தப்பித்து இந்தியா வந்துள்ளார். தனது சகோதரனை விடுவிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கில், கடந்த 3ம் தேதி நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, விக்ராந்த் குமாருக்காக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தை நியமித்து வாதாட ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்துச் சொலினா ஜெட்லி கூறுகையில், ‘மிகவும் இக்கட்டான சூழலில் குறைந்த பணத்துடன் கடன் அட்டை மூலம் பயணச்சீட்டு எடுத்து இந்தியா வந்தேன், 15 ஆண்டுகளாக எனது நிதி ஆதாரங்கள் அனைத்தையும் கணவரிடம் ஒப்படைத்ததால் ஏமாற்றப்பட்டேன். எனது சகோதரனை மீட்பது என்பது இந்திய ராணுவ வீரரின் கவுரவத்திற்கான போராட்டமாகும். இவ்விசயத்தில் பிரதமர் மோடி தலையிட்டுத் எனது சகோதரனை மீட்க வேண்டும்’ என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : PM Modi ,Dubai ,New Delhi ,Selina Jedley ,United Arab Emirates ,Vikrant Kumar Jedli ,
× RELATED எஸ்ஐஆர் பணியில் இடையூறு ஏற்படுத்த...